” தமிழ் மக்களுக்கான நினைவேந்தல் உரிமை வழங்கப்படவேண்டும். அதனை எவரும் தடுக்கமுற்படக்கூடாது. நினைவேந்தலுக்குகூட தடை ஏற்படுத்தி புது குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இலங்கை என்பது ஜனநாயக சோஷலிஸக் குடியரசாகும். எனவே, ஒரு சமுகத்துக்காக, இனத்துக்காக யாராவது தியாகம்செய்திருந்தால், உயிர்நீத்திருந்தால் அவ்வாறானவர்களை நினைவுகூருவதற்கான நினைவேந்தலை நடத்துவதற்கான உரிமை இருக்கவேண்டும். அது கலாசார சம்பந்தப்பட்ட விடயமும்கூட. இதனை பயங்கரவாதம் எனக்கூறிவிடமுடியாது.
எனவே, நினைவேந்தலுக்கு விதிக்கப்படும் தடையை ஏற்றுக்கொள்ளமுடியாது. அவ்வாறு தடைவிதித்து புது குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்களோ எனவும் எண்ண தோன்றுகிறது. தீலிபன் உண்ணாவிரமிருந்து அறவழியில் போராட்டம் நடத்தி உயிர்நீத்தவர். எனவே அவரை நினைவுகூருவதற்கு அனுமதி இருக்கவேண்டும்.” – என்றார்.
