கண்டி நகரில் மாணவர்களின் பணம், பெறுமதியான பொருட்களை திருடும் கும்பல்

கண்டி நகரிலுள்ள பாடசாலை மாணவர்களின் பணம் மற்றும் ஏனைய பெறுமதியான பொருட்களை திருடும் குழுவொன்று செயற்படுவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பெற்றோர் சிலர் கண்டி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், மேலும் சிலர் இதனால் தமது பிள்ளைகளுக்கு பிரச்சினை ஏற்படும் எனும் அச்சத்தில் பொலிஸில் முறைப்பாடு செய்வதை தவிர்த்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிவில் பொலிஸார் என கூறி, மாணவர்களின் புத்தக பைகள் மற்றும் பணப்பைகளை சோதனை செய்து, அவர்களிடம் இருந்து பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை பறித்துவிட்டு யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டுவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை கண்டிக்கு வரும் பெண்களிடம் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்து, அவர்களின் ​அலைபேசிகளை எடுத்துக்கொண்டு ஓடிச் செல்கின்றமை தொடர்பிலும் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், கண்டி வாவி மற்றும் உடுவத்த வனப்பகுதிகளுக்கு வரும் காதலர்களை பயமுறுத்தி அவர்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் பற்றிய தகவல்களும் வெளியாகி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles