புனேவில் பிறந்த நேஹா நர்கெடே (Neha Narkhede), ஸ்ட்ரீமிங் டேட்டா டெக்னாலஜி நிறுவனமான Confluent இன் இணை நிறுவனராவார். இவர் IIFL Wealth Hurun India Rich List 2022 இல் இடம்பிடித்துள்ளார். 37 வயதான இந்திய-அமெரிக்கர் செல்வந்தர்கள் பட்டியலில் தன்னைத்தானே உருவாக்கிக் கொண்ட இளம் பெண் தொழிலதிபர் என்ற பெயரைப் பெற்றுள்ளார். அவர் இன்று பல தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முதலீட்டாளராகவும் ஆலோசகராகவும் பணியாற்றுகிறார்.
ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் நேஹா நர்கெடே ₹ 4,700 கோடி சொத்து மதிப்புடன் 336-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
தனது நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன், திருமதி நர்கெடே LinkedIn மற்றும் ஆரக்கிளில் பணிபுரிந்தார், அங்கு அவர் அப்பாச்சி காஃப்கா மென்பொருளை உருவாக்கிய குழுவின் ஒரு பகுதியாக இருந்தார். தனது குழுவுடன் சேர்ந்து, பிற வணிகங்களில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்து, 2014 இல் கன்ஃப்ளூயண்டை நிறுவினார் என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
திருமதி நர்கெடே சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து, ஜார்ஜியா டெக்கில் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். புனே பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.
ஃபோர்ப்ஸ் தொகுத்த 2022 ஆம் ஆண்டிற்கான அமெரிக்காவின் பணக்கார சுயமாக முன்னேறிய பெண்கள் பட்டியலில் 57 வது இடத்தைப் பிடித்தார். 2018 ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையால் உலகின் சிறந்த 50 தொழில்நுட்ப பெண்களில் ஒருவராக நேஹா நர்கடேவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஹுருன் இந்தியாவின் கூற்றுப்படி, மொத்தம் 1,103 நபர்கள் ₹ 1,000 கோடி சொத்துக்களுடன் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பணக்காரர்களின் எண்ணிக்கை 96 அதிகரித்துள்ளது.
