பெருந்தோட்ட சேவையாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தில் 30% சம்பள உயர்வு உட்பட இதர உரிமைகள் தொடர்பில் இணக்கம் காணப்பட்டு கைச்சாத்திடப்பட்டுள்ளன. வரலாற்றிலே முதல் தடவையாக 30% சம்பள உயர்வு தோட்ட வேவையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட சேவையாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ரொபட் பிரான்சீஸ் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை இராஜகிரியவில் அமைந்துள்ள முதலாளிமார் சங்க காரியாலயத்தில் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்திற்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்குமிடையில் 19 பெருந்தோட்ட கம்பனிகள் உள்ளடக்கிய புதிய கூட்டுப் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இது தொடர்பில் சங்கச் செயலாளர் மேலும் கூறியதாவது,.. தோட்ட உத்தியோகஸ்தர்கள் சார்பாக இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவர் நிசாந்த வன்னியராச்சி, பொதுச் செயலாளர் ரொபட் பிரான்சீஸ். நிதி செயலாளர் எம். சுதாகர், பிரித் தலைவர் தனுக்க விஜயகுனரட்ன ஆகியோரும் சம்மேளனத்தின் சார்பாக சானக்க சமர திவாகர, வஜிரா எல்லபொல , சீவரட்டனம் மகேசன் மடுகல்ல, பிரசாத் த சில்வா ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளனர்.
புதிய கூட்டுப் ஓப்பந்தத்தில் 2022 அக்டோபர் மாதத்திலிருந்து 25% வீதமும், 2024 அக்டோபர் மாதத்திலிருந்து 5% அதிகரிப்புடன் சேர்ந்து 30% வீதம் சம்பள அதிகரிப்பும் அத்துடன் வருடாந்த சம்பள அதிகரிப்பு (annual increment) வீட்டு கூலி(House rent),மரணம் தொடர்பான நிதி ரூபா.200,000த்தால் உயர்த்தப்பட்டுள்ளது. தோட்ட உத்தியோகஸ்தர்களுக்கு 1948ம் ஆண்டு முதல் கூட்டுப் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருவதுடன் 1993 ஆம் ஆண்டு முதல் தடவையாக கம்பனிகளுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.இம்முறை 19 கம்பனிகளின் பிரதான நிறைவேற்று அதிகாரிகள் (chief executive officer)கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.இம்முறை வருடாந்த சம்பள அதிகரிப்பை (annual increment) தோட்ட உத்தியாகஸ்தர்களுக்கு வழங்க முடியாது என்றும் தொழில் திறமை பார்த்து வழங்குவதாகவும் கூறினர்.
இதற்கு தொழிற்சங்கம் விடாப்பிடியாக செயற்பட்டதால் அதை வழமைபோல் வழங்குவதாக ஏற்றுக்கொண்டனர்.
தோட்ட காரியாலயத்தில் கடமையாற்றும் நிருவாக அதிகாரிகளுக்கு(administrative officer)வழங்கும் வருடாந்த சம்பள அதிகரிப்பை போன்று வெளிக்கள உத்தியோகஸ்தர்களுக்கும் வழங்குவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தோட்ட உத்தியோகஸ்தர்களுக்கு தொழில் ரீதியாக எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது பேச்சுவார்த்தை மூலம் கூட்டுப் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது எமது சங்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என்றார்.
