” தேர்தலென்பது மக்களின் ஜனநாயக உரிமை. உரிய காலத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே எமது கட்சி உள்ளது. எனவே, தேர்தலை பிற்போடுவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.”
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு.
” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கான மக்கள் ஆதரவு குறையவில்லை. 25 ஆயிரம் பேர் வீதிக்கு இறங்கினார்கள் என்பதற்காக எமது ஆதரவு தளம் சரியாது. முகநூலில் யார் என்னதான் எழுதினாலும் மக்கள் மனங்களில் மொட்டுதான் உள்ளது. தேர்தலொன்று நடத்தப்பட்டால் அது தெரியவரும்.
எனவேதான் நாமும் தேர்தலை கோருகின்றோம். தேர்தலை பிற்போடுவதற்கு இடமளிக்கமாட்டோம். முன்கூட்டியே தேர்தலை நடத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டுதான் ராஜபக்சக்களுக்கு உள்ளது.” – என்றார்.










