” அதிகாரப்பகிர்வு யோசனை கடந்த 65 வருடங்களாக வெற்றியளிக்கவில்லை. இவ்வாறு 6 தசாப்தங்களாக முடியாமல்போன ஒரு விடயத்துக்கு 52 நாட்களுக்குள் தீர்வைதேட முற்படுவது முட்டாள்தனமாகும்.” – என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில நேற்று தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், நல்லிணக்கத்துக்கான சர்வக்கட்சி மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக எதிர்வரும் சுதந்திர தினத்துக்குள் இணக்கப்பாடொன்றுக்கு வரவேண்டுமென ஜனாதிபதி காலக்கெடு விதித்துள்ளார்.
இந்நிலையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது சம்பந்தமாக கருத்து வெளியிட்ட உதய கம்மன்பில இவ்வாறு கூறினார்.
” தமிழ் சமூகத்தின் அழுத்தத்தால் ‘சமஷ்டி’ என்ற பிரிவினைவாத கோரிக்கை முன்வைக்கப்படுவதும், அதற்கு சிங்கள சமூகத்தின் எதிர்ப்பால் திட்டத்தை மீளப்பெறுவதுமே கடந்த 65 வருடங்களாக இடம்பெற்றுவருகின்றது.” எனவும் உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.
” அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதிக்குள் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டுமென ஜனாதிபதி காலக்கெடு விதித்துள்ளார். 65 வருடங்களால தோற்றுப்போன ஒரு விடயத்துக்கு 52 நாட்களில் தீர்வை எட்டிவிடலாம் என எண்ணுபவர்கள் நிச்சயம் இவ்வுலகில் வாழ்பவர்களாக இருக்க முடியாது.
ஒரு பரிசோதனை, ஒரு நிபந்தனையின்கீழ் மாறுபட்ட பெறுபேற்றை எதிர்பார்த்து பைத்தியக்காரராகவே இருக்க வேண்டும் என ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறியுள்ளார்.
அதேபோலவே 65 வருடங்களாக பெறுபேறு கிடைத்தும் புதிய பரிசோதனை இடம்பெறுகின்றது. அப்படியானால் இந்த அரசுக்கும் பைத்தியம்.” – எனவும் கம்மன்பில விமர்சித்தார்.










