நல்லாட்சியின்போது (2015) ‘கூட்டு எதிரணி’ என்ற பெயரோடு நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர், தமக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டுமென வலியுறுத்தினர்.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சியும் (யானை), ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் (வெற்றிலை) இணைந்து ‘கூட்டரசை’ அமைத்திருந்ததால், நாடாளுமன்றத்தில் மேற்படி இரு கட்சிகளுக்கும் அடுத்தப்படியாக கூடுதல் ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் நீடித்தார்.
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்டாலும், அவர்கள் தேர்தலில் போட்டியிட்ட கட்சி, அரசில் அங்கம் வகிப்பதால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்க முடியாது என அப்போதைய சபாநாயகர் கரு ஜயசூரிய திட்டவட்டமாக அறிவித்தார்.
கடந்த பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் (மொட்டு சின்னம்) போட்டியிட்டு நாடாளுமன்றம் தெரிவாகி, தற்போது சுயாதீனமாக செயற்படும் விமல், கம்மன்பில தரப்பு (உத்தர லங்கா சபாகய) ‘அரசியலமைப்பு பேரவையில்’ தமக்கும் பிரதிநிதித்துவம் அவசியமென வலியுறுத்திவருகின்றது.
அரச சேவையில், அரசியல் தலையீடுகளை தவிர்த்து, சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளும் பிரதான நோக்கிலேயே அரசியலமைப்பு பேரவை செயற்படுகின்றது.
அரசியலமைப்பு பேரவையில் 10 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பர். இதன் தலைவராக சபாநாயகர் செயற்படுவார். சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் பதவி வழி உறுப்பினர்கள்.
ஜனாதிபதியின் பிரதிநிதியொருவர் இடம்பிடித்திருப்பார். ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா பெயரிடப்பட்டுள்ளார்.
எதிர்கட்சி தலைவரின் பிரதிநிதியாக கபீர் ஹசீம் நியமிக்கப்படவுள்ளார். பிரதமரின் பிரதிநிதியாக மொட்டு கட்சி உறுப்பினர் ஒருவர் உள்வாங்கப்படுவார்.
பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அங்கம் வகிக்கும் கட்சியை சாராத, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இடமளிக்க வேண்டும். நல்லாட்சியின்போது இந்த வாய்ப்பு விஜித ஹேரத்துக்கு கிட்டியது.
இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே அந்த கிடைக்க வேண்டும். அந்தவகையில் தமது பிரதிநிதியாக த. சித்தார்த்தனை கூட்டமைப்பு பிரேரித்துள்ளது. இதனை விமல் தரப்பு ஆட்சேபித்துள்ளது.
முக்கிய சபையாக கருதப்படும் அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ்ப் பிரதிநித்துவம் அவசியம். நேர் வழியில் கிடைக்கும் வாய்ப்பை பேரினவாத சக்திகள் தட்டி பறிக்க முற்படுவதை ஏற்கமுடியாது. இதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.
அதேபோல மூன்று சிவில் பிரதிநிதிகளும் நியமிக்கப்பட வேண்டும். இதில் ஒருவர் மலையக தமிழ்ப் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழ் முற்போக்கு கூட்டணி தரப்பில் விடுக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை தொழிலாளர் காங்கிரசும் வரவேற்றுள்ளது.
நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளின் சார்பிலும் 28 தமிழ் எம்பிக்கள் உள்ளனர். இது விடயத்திலாவது அவர்கள் கூட்டாக செயற்பட வேண்டும்.
ஆர்.சனத்










