இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள இறக்குவானை பிரதேச வைத்தியசாலையில் மருந்து வகைகளுக்கும் மருந்துஇடும் உறைகளுக்கும் பாரியளவில் தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக நாளாந்தம் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகின்ற நோயாளர்களும் வார்டுகளில் தங்கி சிகிச்சை வரும் நோயாளிகளும் பாரிய அசௌகரியங்களுக்கு ஆளாகி வருவதாக அங்கலாய்கின்றனர்.
இது சம்பந்தமாக வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளர்களிடம் வினவிய போது, தங்களுக்கு தேவையான மருந்துகள் வைத்தியசாலையில் பற்றாக்குறையாக உள்ளதாகவும் அந்த மருந்து வகைகளை மருந்தகங்களில் விலை கொடுத்து வாங்குமாறும் வைத்தியர்கள் கூறுவதாக தெரிவிக்கின்றனர்.
அதே சமயம் நோயாளர்களுக்கு வைத்தியசாலையில் வழங்கப்படுகின்ற மருந்துகளை இட்டு தருவதற்கு தேவையான உறைகளை வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையில் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையும் நோயாளர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
பொருளாதார நெருக்கடியில் வாழ்கின்ற நோயாளிகள் பணம் கொடுத்து மருந்துகளை பெற்றுக் கொள்வது மிகவும் கஷ்டமாக உள்ளதாகவும் இது சம்பந்தமாக வைத்தியசாலை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.










