அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் விடயம் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்னும் எவ்வித முடிவையும் எடுக்கவில்லை என்று அக்கட்சியின் ஸ்தாபகத் தலைவரும், தேசிய அமைப்பாளருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ள விடயம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” இவ்விடயம் தொடர்பில் கட்சிக்குள் இருவேறு கருத்துகள் காணப்படுகின்றன. உதாரணமாக சரத் வீரசேகர போன்றவர்கள் அதனை எதிர்க்கின்றனர். இது தொடர்பில் ஆழமாக ஆராயப்பட்டுவருகின்றது. இன்னும் கட்சி என்ற வகையில் உறுதியான – இறுதியான முடிவை நாம் எடுக்கவில்லை.
ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பகிர்வு கோட்பாட்டை ஆதரிக்க முடியும். மஹிந்த சிந்தனையிலும் இவ்விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது. 13 பிளஸ் என்ற கருத்தை மஹிந்த ராஜபக்ச முன்வைத்தார். அது அனைத்து மாகாணசபைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான செனட் சபை முறையாகும்.” எனவும் பஸில் குறிப்பிட்டார்.
