” தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பணியாற்றுகிறேன். இதற்காக முன்நிறதால் தேர்தலில் தோற்றேன். இப்போதும் நான் தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடி, புலம்பெயர் மக்களுடன் பேச்சு நடத்தவும் தயாராக இருக்கிறேன்.”
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஹார்வட் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நேர்காணலொன்றின்போது, ஜனாதிபதியிடம் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
” உள்நாட்டுப்போரின் போது பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் பாரிய அளவிலான வன்முறைகள் இடம்பெற்றன என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பயங்கரவாதத் தடைச் சட்டம், குற்றச்சாட்டு அல்லது உரிய நடைமுறைகள் இன்றி மக்களைத் தடுத்து வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கங்கள் பெரும்பாலும் போராட்டக்காரர்களை களங்கப்படுத்துகின்றன. போராட்டக்காரர்களின் நடவடிக்கைகளை உங்களின் அரசாங்கம் எப்படி எதிர்கொள்கிறது?” என்றே ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு,
” யுத்தம் நிறைவடைந்த பின்னர், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும், அப்போதைய ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனுக்கும் இடையில் ஒரு சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற நான் உறுதியாக இருக்கிறேன்.
நான் ஏற்கனவே தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பணியாற்றுகிறேன். நான் தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்துக்காக முன்நிறதால் தேர்தலில் தோற்றேன். இப்போது நான் தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடி, புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இருக்கிறேன். எனவே, அதனால் இவ்வாறு எந்த சந்தர்ப்பத்திலும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் எனக்கு பொருந்தாது.
நான் ஜனாதிபதியாக பதவியேற்ற மறுநாளே போராட்டக்காரர்களை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் சில போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போதுதான் பொலிஸார் தலையிட்டனர். அதன்பின்னர் எனது வீடும் எரிக்கப்பட்டது.
எனது வீட்டில் இருந்த சுமார் 3000 புத்தகங்களை போராட்டக்காரர்கள் எரித்தனர்.
அமைதியான போராட்டங்களை நான் நம்புகிறேன். பிரதமராக நான், குற்றவியல் அவதூறு ஒழிப்பு சட்ட மூலத்தைக்கொண்டு வந்தேன். தெற்காசியாவில் குற்றவியல் அவதூறு சட்டம் இல்லாத ஒரே நாடு இலங்கை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையும் நான் கொண்டு வந்தேன்.
நான் மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுவதற்கு மூன்று முறை அரசியலமைப்புத் திருத்தங்களைக் கொண்டு வந்தேன். இப்போது நான் ஏன் இவற்றை நிறுத்துகிறேன்? நான் தான் உரிமைகளை வழங்கினேன்.
பாராளுமன்றம் மற்றும் ஒட்டுமொத்த அமைப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிய ஒரு சகாப்தம் அன்று இருந்தது. அப்போதுதான் இராணுவம் தலையிட்டது. எனவே அப்போது அவர்களில் இருவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
அரச அலுவலகங்கள், பிரதமர் அலுவலகம் என அனைத்தையும் முற்றுகையிட்டு, பின்னர் பாராளுமன்றம் நோக்கிச் செல்வதை நீங்கள் என்னவென்று அழைப்பீர்கள்? ஆனால் நான் அதனை சரி செய்தேன். ஏனென்றால் ஜனநாயகம் செயல்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதே நேரம் போராட்டங்கள் அமைதியாக இருக்க வேண்டும்.
அடுத்த சில நாட்களில் சர்வதேச மன்னிப்புச் சபையைச் சந்திக்கவுள்ளேன். எனக்கு மறைக்க ஏதாவது இருந்தால், நான் ஏன் சர்வதேச மன்னிப்பு சபையை சந்திக்கிறேன்?” – என்றார்.
