” புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு சர்வதேச சமூகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. எனவே, குறித்த சட்டமூலத்தை அரசு உடனடியாக மீளப்பெற வேண்டும்.” – என்று எதிரணி பிரதம கொறடாவும், நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியல்ல வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அரச பயங்கரவாதத்தை வலுப்படுத்தும் வகையிலேயே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சர்வதேச மட்டத்தில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்துள்ளன. இதனால் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும். தேசிய மட்டத்திலும் சட்டமூலம் தொடர்பில் சிக்கல் உள்ளது. எனவே, அரசு உடனடியாக சட்டமூலத்தை மீளப்பெற வேண்டும்.
சட்டமா அதிபர் திணைக்களத்தால் இச்சட்டமூலம் தயாரிக்கப்படவில்லை. முழுமையாக நிராகரிக்கப்படும் சட்டமூலமொன்றை சட்டமா அதிபர் திணைக்களம் தயாரிக்காது. தனக்கு தேவையான சட்டத்தரணிகளை பயன்படுத்தியே அரசு இதனை செய்துள்ளது. 20 ஆவது திருத்தச்சட்டத்திலும் இப்படிதான் நடந்தது.
நாம் நீதிமன்றத்தை நாடுவோம். புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றியமைப்போம்.” – என்றார்.










