இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தோட்டப்பகுதிகளில் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் சட்டவிரோத மதுபானமான கசிப்பு உற்பத்தியும் அதன் விற்பனையும் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளதாக தோட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எவ்விதமான கட்டுபாடுமின்றி விற்பனை செய்யப்பட்டதால் கசிப்பு உற்பத்தியாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் இம்முறை அதிகரித்த இலாபம் கிடைத்ததாக தோட்ட மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இது இவ்வாறிருக்க காவத்தை- எந்தனை பொலிஸ் பகுதியிலுள்ள மடலகம தோட்டத்தில் கசிப்பு உற்பத்தியிலீடுபட்ட போது கசிப்பு உற்பத்தி செய்யப்படும் கொள்கலனிலிருந்து வெளிவந்த விசவாயுவினால் ஒருவர் உயிழந்ததுடன் 5 பேர் ஆபத்தான நிலையில் எந்தான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக காவத்தை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
புத்தாண்டுக்கு விற்பனை செய்வதற்காக பாரிய குழிகள் தோண்டி அதனுள் 5 கொள்கலன்களை புதைத்து வைத்து அதனுள் கசிப்பு உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை போட்டு மூடி வைத்துள்ளனர். 6 நாட்களின் பின்னர் அதாவது புத்தாண்டு தினத்திற்கு மறுதினமான 15 ஆம் திகதி அதனை எவ்வித முன் பாதுகாப்புமின்றி ஒருவர் திறந்துள்ளார்.
இதன் போது அந்த கொள்கலனிருந்து திடீரென வெளிவந்த விசவாயுவினால் மயக்கமுற்று அவர் கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக சென்ற தோட்ட தொழிலாளிகள் 5 பேரும் விசவாயுவினால் பாதிக்கப்பட்டு கீழே விழுந்துள்ளனர்.
இதனை அறிந்த தோட்ட மக்கள் விசவாயுவினால் பாதிக்கப்பட்ட ஆறு பேரையும் எந்தான தோட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது ஒருவர் இடைவழியில் உயிரிழந்துள்ளனர்.
