20ஆவது திருத்தம் சீனர்களும் நாடாளுமன்றம் வர வழி செய்யுமா?

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி
இரட்டை குடியுரிமையுள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியும் என்ற வகையில் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பப்பட்டது.

இப்படியே சென்றால் சீனர்களுக்கு இலங்கை நாடாளுமன்றத்துக்கு வர முடியும் என்ற வகையில் மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது. யாருடைய தேவைக்கு இணங்க இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு நாடாளுமன்றம் வருவதற்கு வழிவகைகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன? என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

இதற்கு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல பதிலளித்தார்.
நாங்கள் 20 ஆவது திருத்தம் குறித்து பல்வேறு தரப்பினால் முன்வைத்த யோசனைகளை நேற்று நடைபெற்ற அமைச்சரவையிலும் நீண்ட நேரம் கலந்துரையாடினோம். யாருடைய தேவைக்கு கொண்டுவரப்பட்டது என்ற உங்களுடைய அந்த இறுதிக்கேள்வி முக்கியமானது. அதனை யாருடைய தேவைக்காக 19 ஆவது யாப்ப்பில் சேர்த்தார்கள் என்று மீண்டும் கேட்க வேண்டியுள்ளது. 1948 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை இல்லாத ஒரு பிரச்சினையை அதில் கொண்டுவந்தார்கள். ஒரு குழுவை மட்டும் இலக்கு வைத்து மேற்கொண்ட பல்வேறு தீர்மானங்கள் அதில் உள்ளன. 1948 ஆம் ஆண்டில் இருந்து 19 ஆம் யாப்பை கொண்டுவரும் காலம் வரை நாட்டில் இதுபற்றிய எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. இந்த காலத்துக்குள் இரட்டை குடியுரிமை கொண்ட பலர் நாடாளுமன்றத்தில் இருந்தனர். நாட்டின் மக்களுக்கும் இது தொடர்பில் ஒரு பொறுப்பு இருக்கிறது. இரட்டை குடியுரிமை கொண்ட ஒருவரை நாட்டில் தலைவராக மாற்றுவதா இல்லையா என்று அவர்கள் தீர்மானிக்க வேண்டும். இது மக்கள் வாக்கெடுப்புக்கு சமம்.’ என்று பதிலளித்தார்.

இதன்பின்னர், அமைச்சரவை இணைப்பாளரும், அமைச்சருமான உதய கம்மன்பிலவிடம் ஊடகவியலாளர் மற்றுமொரு கேள்வியை முன்வைத்தார்.
வெளிநாடுகளில் இருந்து வருகின்ற அச்சுறுத்தல்களை தோற்கடிக்க வேண்டும் என அரசாங்கத்தில் உள்ள விமல் வீரவன்ச, (நீங்கள்) உதய கம்மன்பில உள்ளிட்டவர்கள் தொடர்ச்சியாக குரல் கொடுத்தார்கள். இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் மூலம் அப்படியான அச்சுறுத்தல் வருவதற்கு வாய்ப்புக்கள் இருக்கிறது அல்லவா?

இதற்குப் பதிலளித்த அமைச்சர் உதய கம்மன்பில,
‘தேசிய சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய. ஜனநாயக வலது சாரி முன்னணியும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் அந்த கட்சிகளின் நிலைப்பாட்டை அறிவித்துள்ளன. இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு அரசியலில் ஈடுபடும் வாய்ப்பை வழங்கக்கூடாது என்பதுதான் அந்த கட்சிகளின் நிலைப்பாடாக இருக்கிறது. இது பற்றி நீண்ட நேரம் நேற்று அமைச்சரவையில் பேசப்பட்டது. அது பற்றிய வாதங்கள் தொடர்ந்தும் முன்வைக்கப்படுகின்றன. அந்த வாதங்கள் மூலம் நிறைய விடயங்களுக்கு நாம் தீர்வை பெற்றுக்கொண்டோம். தீர்த்துக்கொள்ள முடியாத சிற்சில காரணங்கள் மட்டுமே இருக்கின்றன. குழு கூட்டத்திற்கு வருகின்ற பொழுது சில வேளைகளில் இதனை கலந்துரையாடி தீர்த்துக்கொள்ள முடியும் என்பதே எங்கள் நிலைப்பாடு.’ என்று தெரிவித்தார்.

கொவிட் 19 நெருக்கடி காரணமாக அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் இணையம் வழியாக இணைந்துகொள்ளப்பட்டு, கேள்விகளை முன்வைக்க அனுமதிக்கப்பட்டனர். இணைய வழி நடத்தப்பட்ட முதலாவது செய்தியாளர் சந்திப்பு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் குறித்த முடிவுகளை உயர் நீதிமன்றம் ஏற்கனேவே சபாநாயகருக்கு அறிவித்துள்ள நிலையில், 20ஆவது திருத்தச் சட்டம் மீதான வாக்கெடுப்பு 22ஆம் திகதி மாலை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles