கடந்த 08ஆம் திகதி முடிவடைந்த க.பொ.த சா/த பரீட்சையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கிச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர், மற்றுமொரு மாணவி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மாணவர்களில் ஒருவரான தனுஷ்க மிஹிரங்க என்ற பாடசாலை மாணவன் இதன் போது உயிரிழந்துள்ளார். இவர் மரதங்கடவளை ஸ்ரீ ராகுல மகா வித்தியாலயத்தில் தரம் 11 ல் கல்வி கற்றுவந்த மாணவராவார்.
மரதங்கடவளை ஸ்ரீ ராகுல மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுதிவிட்டு, குறித்த மாணவன் தனது வகுப்பைச் சேர்ந்த மற்றொரு நண்பரின் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குப் புறப்பட்டுள்ளார். இச் சந்தர்ப்பத்தில் இப்பலோகம தம்பலஸ்ஸாகம நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் தம்பலசாகம பகுதியை நோக்கி வந்தபோது மற்றுமொரு பாடசாலை மாணவியின் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இவ் விபத்து இடம் பெற்றதாக இப்பலோகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ் விபத்தின் போது பலத்த காயமடைந்த குறிப்பிட்ட மாணவர்கள் மரதங்கடவல கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், இரு மாணவர்களும் மாணவியும் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு இடம்மாற்றப்பட்டனர். இவர்கள்அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த (09) காலை மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற மாணவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவருடன் சிகிச்சை பெற்று வந்த ஏனைய மாணவர்களில் பாடசாலை மாணவி கடந்த (09) காலை வைத்தியசாலையை விட்டு வெளியேறியதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. விபத்துக்குள்ளான இரு மோட்டார் சைக்கிள்களும் தற்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இபலோகம பொலிஸார் இது பற்றிய மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
