ஏழு பேருக்கு உயிர் கொடுத்த மாணவி A/L பரீட்சையில் 3A சித்தி

மூளைச்சாவடைந்ததால் தனது உடல் உறுப்புகளை வழங்கி எழு பேருக்கு உயிர்கொடுத்து, இவ்வுலகைவிட்டு சென்ற 19 வயது மாணவியான விஹகனா ஆரியசிங்க, உயர் தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறை பெற்றுள்ளார்.

குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியில் இருந்து வர்த்தக பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய அவர், மூன்று A சித்திகளை பெற்றுள்ளார்.

மாவட்ட மட்டத்தில் 176 ஆவது இடத்தையும், தேசிய மட்டத்தில் 2,256ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். 1.7 இஸட் புள்ளிகளை பெற்றுள்ளார்.

குருநாகல் பகுதியில் மூளை புற்று நோய் காரணமாக மூளைச்சாவடைந்த மாணவியொருவர் தனது உடல் உறுப்புகளை வழங்கி 7 பேரின் உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் அண்மையில் இடம்பெற்றது.

இலங்கையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்கள் குழுவொன்று இதயம் மற்றும் நுரையீரல் இரண்டையும் ஒரே நோயாளிக்கு மாற்றுவதற்கான முதல் சத்திரசிகிச்சையை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளது.

இதன்போது உறவினர்களின் அனுமதியுடன் மூளைச்சாவடைந்த மாணவியின் இதயம் மற்றும் நுரையீரல்கள் என்பன இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்று வந்த மருந்துவ நிபுணருக்கு இவ்விரு உறுப்புகளும் பொருத்தப்பட்டுள்ளன.

குறித்த மாணவியிடமிருந்து எடுக்கப்பட்ட இரண்டு சிறுநீரகங்களும் குருநாகல் போதனா வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டன.

மேலும், கல்லீரல் மற்றும் கண் சவ்வுகள் என்பன மூன்று பேருக்கு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும் வகையில் வழங்கப்பட்டுள்ளதுடன், , விஹகனாவின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட 5 உறுப்புகள் மூலம் ஏழு பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles