“ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உண்மை கண்டறியப்படும் எனக்கூறி ஆட்சிக்குவந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தகவல்களை மூடிமறைக்கும் முயற்சியிலேயே இறங்கினார். தற்போதைய ஜனாதிபதியும் அதேவழியில்தான் பயணிக்கின்றார்.” – என குற்றஞ்சாட்டியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச.
இது தொடர்பில் அவர் நேற்று கூறியவை வருமாறு,
“ உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்கள்,பிரதான சூத்திரதாரிகளாக செயல்பட்டவர்கள், அதில் பொதிந்துள்ள அரசியல் இலக்குகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும். அதற்காக வெளிப்படை தன்மையுடன்கூடிய சுயாதீன விசாரணை அவசியம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் இடம்பெறவுள்ளது, இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை அரசிடம் கேட்டபோது, வழங்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பின்பற்றியது போலவே , இரகசியங்கள் மறைந்திருக்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்களை எதிர்க்கட்சித் தலைவருக்குக் கூட கிடைக்காத வகையில் தற்போதைய ஜனாதிபதியும் மறைத்துள்ளார்.
இரகசியமான மற்றும் உணர்ச்சிகரமான விடயங்கள் என்று கூறி தற்போதைய ஜனாதிபதியும் உண்மையை மறைத்து வருகின்றார், மக்களுக்கு போலவே எதிர்க்கட்சித் தலைவரால்கூட வாசிக்க முடியாத வகையில் அறிக்கைகள் மறைக்கப்பட்டுள்ளன. இது எதிர்க்கட்சி தலைவரின் நாடாளுமன்ற சிறப்புரிமையைமீறும் செயலாகும்.” – என்றார்.
