” பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் என்பவற்றை அரசு உடனடியாக மீளப்பெற வேண்டும்.” – என்று வலியுறுத்தியுள்ளார் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். அத்துடன், நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் இடித்துரைத்தார்.
இது தொடர்பில் விஜித ஹேரத் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு,
” அச்சுறுத்தல் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி பதவி விலகியுள்ள விடயம் பாரதூரமான விடயமாகும்.
இது தனி நபர் ஒருவருக்கு எதிரான அச்சுறுத்தல் அல்ல, மாறாக ஒட்டு மொத்த நீதித்துறைக்கும் விழுந்த அடியாகும்.
எனவே, மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு, அந்த அச்சுறுத்தலை விடுத்தது யார் என்பது உள்ளிட்ட உண்மை நிலை கண்டறியப்பட்டு, நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் ஏனைய நீதிபதிகளுக்கும் தற்துணிவுடன் செயற்படும் தமது பணியை முன்னெடுக்க நம்பிக்கை வரும். நீதித்துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்பட வேண்டும்.
மக்களை அச்சுறுத்தல்மூலம் ஒடுக்க முற்படும் அரசின் முயற்சிகளை நாம் தோற்கடிப்போம். எனவே, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் என்பன மீளப்பெறப்பட வேண்டும்.” – என்றார்.
