சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்கும் சரத்துகளில் அரசு கைவைக்கவில்லை

“அரசியலமைப்பில் சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்கும் எந்தவொரு சரத்திலும் அரசாங்கம் கைவைக்கவில்லை” என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

“சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்வதா இல்லையா என்பதை ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ தீர்மானிக்க முடியாது. அது குறித்து உயர்நீதிமன்றமே சட்ட வியாக்கியானத்தை வழங்கும். தேவை ஏற்படின், ஜனாதிபதி உயர்நீதிமன்றத்திடம் சட்ட விளக்கத்தை மட்டுமே கோர முடியும்.

எது எப்படி இருந்தாலும், இறுதியில் உயர்நீதிமன்றம் வழங்கும் சட்ட வியாக்கியானத்திற்கு அமைவாகவே அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும். அரசியலமைப்பில் சர்வஜன வாக்கெடுப்பைக் கட்டாயமாக்கும் எந்தவொரு சரத்திலும் அரசாங்கம் மாற்றம் செய்யவில்லை.

அதேவேளை, அரசாங்கத்திற்குள் எவ்வித பிரச்சினைகளும் இல்லை. அனைத்துச் சவால்களையும் எதிர்கொண்டு நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களைச் செயற்படுத்தவே ஜனாதிபதி முயற்சித்து வருகின்றார்.

நீதிமன்றங்களில் உள்ள வழக்குச் சுமைகளைக் குறைப்பதும், நீதித்துறையின் மீதான பொதுமக்கள் நம்பிக்கையை அதிகரிப்பதுமே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்,” என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Related Articles

Latest Articles