தமது கட்சி உறுப்பினர்களுக்கு அல்லாமல் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு மேலதிகமாக அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமைக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதியின் இந்த முடிவு தவறானது, அதனை கடுமையாக எதிர்க்கின்றோம் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
” அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவை அனைத்தும் போலியானவை என்பது இறுதியில் உறுதியானது. மாற்றம் ஒன்று தேவையென கருதி ஜனாதிபதி அந்த மாற்றத்தை செய்திருக்கலாம். தொழில் ரீதியாக வைத்தியரான ரமேஷ் பத்திரண திறமையான அமைச்சர், சுகாதார அமைச்சராக பதவியேற்ற அவருக்கு கட்சியின் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதேபோல சிறு கவலையும் உள்ளது, இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளோம். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்குரிய ஆதரவை எமது கட்சியே வழங்கிவருகின்றது. மொட்டு கட்சி உறுப்பினர்களே பெரும்பான்மையாக உள்ளது. சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஐந்து பேரே அரசில் உள்ளனர். இந்நிலையில் சுதந்திரக் கட்சிக்கு ஒரு அமைச்சு பதவி (மஹிந்த அமரவீர), இராஜாங்க அமைச்சு பதவி (ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய) வழங்கப்பட்டமை தவறான நடவடிக்கையாகும். ஜனாதிபதி தவறிழைத்தாலும் அதனை சுட்டிக்காட்ட தயங்கமாட்டோம். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றோம்.
இந்த சம்பவத்தால் ஜனாதிபதிக்குரிய ஆதரவை மீளப்பெறுவது குறித்து எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. ஆனால் தமக்கு ஆதரவு வழங்கும் தரப்பை புறக்கணிக்கும் வகையில் ஜனாதிபதி செயற்படுவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. “- என்றார்.
