அதிபர், ஆசிரியர்கள்மீது அரசினால் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளைக் கண்டித்தும், ஆசிரியர்களின் உரிமைகளை அடக்குமுறையால் பறிக்க வேண்டாம் என வலியுறுத்தியும் புசல்லாவை நகரில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
புசல்லாவை பஸ் தரிப்பிடத்துக்கு முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்தில் சுமார் 10 இற்கு மேற்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பினரால் கொழும்பில் கடந்த 24 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட நடை பயணத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கண்டனர்.
அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை வழங்கு, இலவசக் கல்வியை உறுதிப்படுத்து, கல்விக்கு 6 வீத ஒதுக்கீட்டை வழங்கு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அதிபர், ஆசிரியர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு புசல்லாவை போராட்டத்தின்போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அத்துடன், முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
