‘மலையக மக்களுக்கு காணி உரிமை’ – இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பு வரவேற்பு!

மலையக தமிழ் மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும் என ‘நாம்-200″ நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதியை தாம் வரவேற்பதாக இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் ரகுநாதன் ரமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

‘நாம்-200″ நிகழ்வு தொடர்பில் கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு வரவேற்றுள்ளார்.

மலையக தமிழ் மக்களுக்கு கடந்த காலங்களில் காணி உரிமை வழங்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், அந்த காணி உரிமை பயனற்ற ஒன்றாக காணப்படுகின்றது என அவர் கூறுகின்றார்.

வங்கிகளில் காணி உறுதிப் பத்திரங்களை வைத்து, கடனை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமைகள் தொடர்பான செய்திகளையும் தம்மால் கடந்த காலங்களில் அறியக்கூடியதாக இருந்தது என அவர் சுட்டிக்காட்டினார்.

மலையக தமிழ் சமூகம் இலங்கைக்கு வருகைத் தந்து 200 வருடங்கள் என கூறப்பட்டாலும், இந்திய வம்சாவளித் தமிழர்கள் 1600ஆம் ஆண்டு காலப் பகுதியிலேயே இலங்கையை வந்தடைந்துள்ளமைக்கான சான்றுகள் காணப்படுகின்றது என அவர் குறிப்பிடுகின்றார்;.

எனினும், ஆங்கிலேயர்களினால் வழங்கப்பட்ட லயின் அறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள 1923 என்ற ஆண்டையை சான்றாக வைத்து, இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைக்கு வருகைத் தந்து 200 வருடங்கள் என அடையாளப்படுத்தப்படுவதாக ரமேஷ்வரன் கூறுகின்றார்.

இதேவேளை, மலையகத்தில் படித்த சமூகமொன்று உருவாக்க வேண்டும் என்பதே இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் நோக்கம் என அவர் சுட்டிக்காட்டினார்.

மலையக மக்களை ஏனைய சமூகங்களுடன் தேசிய நீரோட்டத்தில் இணைத்துக்கொள்வதாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்து மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், அரச காணிகளை குத்தகை அடிப்படையில் மலையக தமிழர்களுக்கு பகிர்ந்தளிக்குமாறும், அதனை மலையக தமிழர்கள் பராமரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

அதனூடாக பெருந்தோட்ட காணிகள் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு, அதனூடாக தனி நபர் வருமானம் மாத்திரமன்றி, அரசாங்கத்தின் வருமானத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் ரகுநாதன் ரமேஷ்வரன் தெரிவிக்கின்றார்.

மலையக மக்களுக்கு உரிமைகளை வழங்குவதாக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை தடுத்து நிறுத்த எவரேனும் நடவடிக்கை எடுப்பாராயின், அது மாபெரும் பாவச் செயல் என அவர் குறிப்பிடுகின்றார்.

மலையக மக்களின் அடிப்படை உரிமைகளை வழங்கும் நடவடிக்கைகளுக்காக தாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயார் என இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் ரகுநாதன் ரமேஷ்வரன் குறிப்பிடுகின்றார்.

மலையக தமிழ் மக்களுக்கு ஜனாதிபதியினால் வழங்கப்படும் என கூறப்படுகின்ற காணி உரிமையானது, அரச மற்றும் தனியார் வங்கிகளினால் ஏற்றுக்கொள்ளப்படும் விதத்திலான காணி உறுதிப்பத்திரமாக அமைய வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

காணி உரிமைகள் பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி வழங்கியுள்ள இந்த தருணத்திலேயே, அனைத்து மலையக தமிழ் அரசியல் தலைமைகளும் ஓரணியில் திரண்டு, இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் ரகுநாதன் ரமேஷ்வரன் கோருகின்றார்.

அத்துடன், காணி உரிமைகள் நுவரெலியா மாவட்டத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ள ரமேஷ்வரன், இந்த காணி உரிமை அனைத்து மாவட்டங்களிலும் வாழும் மலையக தமிழ் சமூகத்திற்கு பகிர்ந்தளிக்கப்படவேண்டும் எனவும் கூறுகின்றார்.

அத்துடன், இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்தையும், அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

மலையக மக்களுக்கு உதவி கரம் நீட்டும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பு உள்ளிட்ட தம்சார்ந்த அனைத்து அமைப்புக்களும் ஒத்துழைப்பாக இருக்கும் என இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் ரகுநாதன் ரமேஷ்வரன் நம்பிக்கை வெளியிட்டார்.

Related Articles

Latest Articles