தோட்டத் தொழிலாளர்களுக்கும் ரூ. 10 ஆயிரம் கொடுப்பனவு அவசியம்! ராதா

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 10 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாதான் வழங்கப்படுகின்றது. மாதம் 20 ஆயிரம் ரூபாவரையே வருமானம் பெறுகின்றனர். நான்கு பேர் கொண்ட குடும்பமொன்றுக்கு மாதம் செலவுக்கு 83 ஆயிரம் வரை தேவைப்படுகின்றது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் மூன்று வருடங்களாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு இல்லை. ஆனால் வாழ்க்கை செலவு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. தேயிலை ஏற்றுமதி அதிகரித்தாலும் அதன்மூலம் தொழிலாளர்களுக்கு நன்மை கிடைப்பதில்லை. பெருந்தோட்டப்பகுதிகளில் 70 சதவீதமானோர் வறுமை கோட்டின்கீழ் வாழ்கின்றனர்.

எனவே, அரச ஊழியர்களுக்கு வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்ட 10 ஆயிரம் ரூபா வாழ்க்கைச்செலவு கொடுப்பனவு எமது மக்களையும் சென்றடைய வேண்டும். அதாவது நாட் சம்பளத்துடன் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 500 ரூபாவை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போது 20 நாட்களுக்கு 10 ஆயிரம் ரூபா கிடைக்கப்பெறும். நிறுவனங்களுடன் கதைத்து இதற்கான பொறிமுறையை அரசு உருவாக்க வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles