பெருந்தோட்ட பிரதேச மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு வழி வழிவகுத்து, பிரதேச உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வரவு செலவுத் திட்ட யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது. மலையக எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயங்கள் நடைமுறைக்கு வந்து விடக்கூடாது என்ற உள்நோக்கத்தில் தமது கருத்துக்களை முன் வைக்கின்றனர் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கிடைத்திருக்கின்ற வாய்ப்புகளை எமது மக்களுக்கு எப்படி பயன்படுத்தலாம் என்று சிந்திப்பதை விடுத்து கிடைக்காத விடையங்களை காட்டி மக்களை எவ்வாறு திசை திருப்பலாம் என்பதிலேயே முனைப்பு காட்டுகின்றனர்.
பெருந்தோட்ட பிரதேச மக்களின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 போச் காணி சட்டரீதியான காணி உறுதியுடன் கிடைப்பது என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மற்றுமொறு மைல் கல்லாகும்.
நடைமுறையில் இருக்கின்ற அரசாங்கத்தின் மூலம் இதை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு ஒவ்வொரு மலைகத் தமிழனும் ஒத்துழைக்க வேண்டும். மலையக எதிரணி அரசியல் கட்சிகள் தமது சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விட்டு ஒட்டுமொத்த மலையக மக்களின் நலன் கருதி செயற்பட வருமாறு அழைப்பு விடுக்கிறோம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட பிரதேசத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கென 10 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான பெருந்தொகை பணம் இதற்கு முன் பெருந்தோட்ட பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் எதிரணியை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இது சிங்கள மக்களுக்கும் சேர்ந்து கிடைக்கின்ற தொகை என இனவாதம் பேசுகிறார். அனுபவமிக்க அரசியல் தலைவர் ஒருவரிடம் இருந்து இவ்வாறான கருத்துக்கள் வெளிப்படுவது சரிதானா என்பதை அவர் தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த வரவு செலவு திட்ட யோசனைகளில் தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் அறிவிக்கவில்லை. அவ்வாறு அறிவித்திருந்தால் கூட்டு ஒப்பந்தம் நடைமுறை இல்லாத நிலையில் அது தோட்டத் தொழிலாளர்களுக்கும் பொருந்தும். ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு வரவு செலவு திட்டத்தில் சம்பள உயர்வு அறிவிக்கப்படவில்லை என்பது பொருத்தமற்ற வாதமாகும். எனினும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு பெருந்தோட்ட கம்பெனிகளுடன் பல சுற்று பேச்சு வார்த்தைகள் நடைபெற்று இருக்கின்றன. இவ்விடயத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னெடுத்துச் செல்கின்றது.
கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் வரவு செலவு திட்டத்தில் தனியார் துறையினருக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் அது தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதை அப்போது ஆளும் கட்சியிலிருந்த தற்போது எதிரணியில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மறந்துவிட்டார்கள். ஆனால் அதற்கு பதிலாக நாளொன்றுக்கு 50 ரூபாய் படி சம்பளத்தை அதிகரித்து வழங்கப் போவதாக உறுதியளித்துவிட்டு பின்னர் விரலை சுட்டுக்கொன்டதை ஞாபகப்படுத்துகிறோம்.
இவர்கள் கூட்டு ஒப்பந்தத்தை முற்றாக நிராகரித்தார்கள். கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இல்லாத நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிய இன்னல்களுக்கு இவர்களால் எந்த நிவாரணமும் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெருந்தோட்ட மக்களை வைத்து சுயநல அரசியல் செய்ய வேண்டும் என்று எப்போதும் நினைத்ததில்லை.
மலையக மக்களின் அரசியல் தொழிற்சங்க அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக அர்பணிப்போடு செயல்பட்டு வருகிறது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் அதிகரித்துக் கொள்வதற்கான பல்வேறு உபாயங்களை மேற்கொண்டு வருகிறோம். அது வெற்றி அடைய விட்டால் மீண்டும் சம்பள நிர்ணய சபையின் ஊடாக சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள தயங்க மாட்டோம். எவ்வாறெனினும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சகல அரசியல் தொழிற்சங்க சக்திகளும் ஒரே இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுதியாக இருக்கின்றது. .” எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
