“குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகளுக்கு குடியுரிமை பறிபோகும்”

” பொருளாதாரம் வீழ்ச்சியடைய காரணமாவர்கள் எனக் கூறப்படும் நபர்களின் ( மஹிந்த, கோட்டாப, பஸில் உட்பட) குடியுரிமையை இரத்து செய்ய வேண்டுமெனில் அதற்கு அமைச்சரவையின் அனுமதியும், நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமும் அவசியம்.” – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நிதி அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே இருக்கின்றது. எனினும், அந்த நிதியை நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதீப்பை ஏற்படுத்தும் விதத்திலோ, பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய வைக்கும் விதத்திலோ அல்லது மோசடியில் ஈடுபடுவதற்காகவோ பயன்படுத்தினால் அதற்கு நிறைவேற்று அதிகாரம் பொறுப்புக்கூற வேண்டும். அந்தவகையில் நீதிமன்ற தீர்ப்புக்கு நிறைவேற்று அதிகாரம் கட்டுப்பட வேண்டும்.

எனவே, தேவையேற்படின் இது தொடர்பில் விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைத்து, விசாரிப்பதற்கு ஜனாதிபதிக்கும், அமைச்சரவைக்கும் அதிகாரம் உள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தவறிழைத்துள்ளனர் என மேற்படி ஆணைக்குழு பரிந்துரைக்குமானால், அதனை அடிப்படையாகக்கொண்டு குறிப்பிட்ட நபர்களின் குடியுரிமையை ஏழாண்டுகளுக்கு இல்லாது செய்யும் யோசனையை நாடாளுமன்றத்தில் முன்வைக்கலாம்.

அமைச்சரவையின் அனுமதியுடன்தான் இந்த யோசனையை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரமுடியும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைபலம் அவசியம்.” – எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles