” இந்த நாடு எம்மை ஏமாற்றிவிட்டது – காணி உரிமையை வென்றெடுக்க முழு ஆதரவு” – திகா

” மலையக மக்களுக்கு காணி உரிமை மிக அவசியம். அவர்களுக்கு 10 பேர்ச்சஸ் பெற்றுக்கொடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு வழங்கப்படும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுவரும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் ஆகின்றன. ஆனால் அந்த மக்களுக்கு இன்னும் உரிமைகள் முழுமையாக கிடைக்கப்பெறவில்லை. உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க நல்லாட்சி அரசில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏழு பேர்ச்சஸ் காணியில் வீடுகள் அமைக்கப்பட்டன. மலையக அதிகார சபையை கொண்டுவந்தோம். பிரதேசசபை சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்தோம். இப்படியான பல நல்ல விடயங்களை செய்தோம். யார் குத்தினாலும் பரவாயில்லை அரிசி வந்தால் போதும், இன்று நாம் விமர்சன அரசியல் செய்வதில்லை. யாரையும் விமர்சிக்க போவதும் இல்லை.

மலையக மக்களுக்கு நாம் சட்டப்பூர்வமான உறுதி பத்திரத்தையே பெற்றுக்கொடுத்தோம். அதனை சபையில் முன்வைக்கின்றேன். மஹிந்தானந்த வழங்கியதுதான் போமிட். நாம் வழங்கியதை வங்கியில் வைத்து கடன்கூட பெறலாம்.

2015 இல் 500 வீடுகள் அமைக்கப்பட்டன. 2016 இல் ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டன. 2017 ஆம் ஆண்டு 2 ஆயிரம் வீடுகள் கையளிக்கப்பட்டன. 2018 இல் 500 வீடுகள் கையளிக்கப்பட்டன. அதன்பின்னர் 3 ஆயிரம் வீடுகளை அமைக்க ஏற்பாடுகள் இடம்பெற்றன.

மலையகத்தில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் தகரம் வேண்டும், சீமெந்து வேண்டும் எனக் கேட்ட மக்கள் இன்று காணி உரிமை கேட்பது வரவேற்ககூடிய விடயம். இந்த நாட்டுக்காக எமது மக்கள் உழைத்தனர். ஆனால் இந்த நாடு எம்மை ஏமாற்றியுள்ளது. பாதீட்டில் நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும் திறைசேரியில் இருந்து வராது. இது தொடர்பில் அமைச்சர் ஜீவன் கவனமாக இருக்க வேண்டும்.

கூட்டு ஒப்பந்தம் செய்தாலும், சம்பள நிர்ணய சபைக்கு சென்றாலும் குறைந்த அளவையே கம்பனிகள் சம்பளமாக வழங்குகின்றன. எனவே, தோட்டக் காணிகள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். பொருளாதார ரீதியிலான பிரச்சினைகளுக்கு இது தீர்வாகவும் அமையும். தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க ஒன்றிணைவோம்.

காணி உரிமையை கையில் எடுத்துள்ளீர்கள். மக்களுக்கு 10 பேர்ச்சஸ் கிடைக்க எமது முழு ஒத்துழைப்பும் வழங்குவோம். ” – என்றார்.

Related Articles

Latest Articles