” மலையக மக்களுக்கு என்ன தேவையோ அதனை நிச்சயம் செய்வோம்” – ரமேஷ்

” மலையக மக்களுக்கு என்ன தேவையோ அதனை நாம் நிச்சயம் செய்வோம். மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி எமக்கு முழு ஆதரவு வழங்குவார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. ” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

” நாட்டுக்கு வருமானம் பெற்றுகொடுக்கும் மக்களே மலையக பெருந்தோட்ட மக்கள். அவர்களின் நிலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றி இருந்தனர். இதற்கு அரசாங்கங்களே பொறுப்பு கூற வேண்டும். மலையக மக்களுக்காக பிரஜா உரிமை உட்பட முக்கிய உரிமைகளை காங்கிரஸ் பெற்றுக்கொடுத்துள்ளது. அம்மக்களுக்கு தொடர்ந்தும் சேவைகளை ஆற்றிவருகின்றது .எமது அமைச்சர் ஜீவன் தொண்டமான் 10 பேர்ச்சஸ் காணியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார். மலையக மாற்றத்துக்காக சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிவருகின்றார்.

குறைகூறும் அரசியல் நடத்தப்பட்டுவந்தமையும் மலையகம் முன்னேறாமைக்கு காரணமாகும். நாம் விமர்சன அரசியலை முன்னெடுப்பதில்லை.

மலையக மாற்றத்துக்கு கல்விதான் முக்கியம். நான் மாகாண கல்வி அமைச்சராக இருந்தபோது அத்துறைக்கு திறமையானவர்களை நியமித்தோம். கல்வியில் முன்னேற்றம் வந்தது.

அமைச்சு பதவி கிடைக்காததால் சிலருக்கு ஜனாதிபதிமீது நம்பிக்கை இல்லை. ஆனால் எமக்கு நம்பிக்கை இருக்கின்றது.” – என்றார்.

 

Related Articles

Latest Articles