“போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய 4,665 பேர் இருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. இவர்கள் அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளேன்.” – என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
அத்துடன், கடந்த 04 நாட்களில் மாத்திரம் புலனாய்வுத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 731 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புலனாய்வு அறிக்கைகளில் குறிப்பிடப்படாத சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
இதற்கு மேலதிகமாக 8,451 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 346 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 61 பேர் சொத்து விசாரணைக்காகவும், 697 பேர் புனர்வாழ்விற்காகவும் அனுப்பப்பட்டுள்ளனர்.
அத்துடன், கடந்த 04 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 431 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா, ஹஷிஸ், ஹெரோயின், ஐஸ், கஞ்சா உள்ளிட்ட பெருந்தொகை போதைப் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்களுக்கு சொந்தமான வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களின் பெறுமதி சுமார் 162 மில்லியன் ரூபாவாகும். எனவே, இதன் ஊடாக இந்த முயற்சி எவ்வளவு தூரம் வெற்றிகரமாக அமைந்துள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு கைப்பற்றப்படும் அனைத்துப் பொருள்களையும் நீதிமன்றம் மூலம் அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” – எனவும் அமைச்சர் கூறினார்.










