நோர்வூட் ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் திடீர் பணி நீக்கம் – விசாரணை ஆரம்பம்

நோர்வூட் ஆடை தொழிற்சாலையில், எவ்வித முன்னறிவித்தலும் இன்றி தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. எதிர்வரும் 22 ஆம் திகதி மேற்படி தொழிற்சாலையின் பிரதானிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நோர்வூட் ஆடை தொழிற்சாலையில் எவ்வித முன்னறிவித்தலுமின்றி ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் தொழில் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், இவர்களுக்கான கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லை.

இது சம்பந்தமாக அங்கு தொழில் இழந்த சில நபர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜிடம் முறைப்பாடு தெரிவித்தனர். இது சம்பந்தமாக அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு கலந்துரையாடப்பட்டது.

அதன் அடிப்படையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் மற்றும் நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அம்பகமுவ பிரதேச அரசியல் துறை அமைப்பாளருமான ரவி குழந்தைவேலும் ஹட்டன் தொழில் திணைக்களத்தில் முறைப்பாடு செய்தனர்.

இதன் அடிப்படையில் நோர்வூட் ஆடை தொழிற்சாலையின் முகாமைகளார்களை நேற்று அழைத்து ஹட்டன் தொழில் திணைக்களத்தின் ஆணையாளர் மனோஜ் பண்டாரவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்விசாரணையில் ஆடைத் தொழிற்சாலையில் தொழிலில் இழந்தவர்கள் சார்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அம்பகமுவ பிரதேச அரசியல் துறை அமைப்பாளரான ரவி குழந்தைவேல் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தொழிற்சங்க பணிப்பாளர் லோகதாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்போது சாதக முடிவு கிடைக்காததால், நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர்களை அழைத்து பேசுவதற்கு முடிவு செய்யப்பட்டது, இதற்கமைய வரும் ஜனவரி 22ஆம் திகதி மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்.

” வரும் 22 ஆம் திகதி சாதகமான பதில் கிடைக்காவிட்டால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழில் இழந்தவர்கள் சார்பில், சட்ட நடவடிக் தொழில் திணைக்களத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பதை இன்று தொழிலாணையாளரிடம் அறிவித்துள்ளோம்.” – என்று ரவி குழந்தைவேல் தெரிவித்தார்.

இந்த விசாரணையின் போது நோர்வூட் ஆடை தொழிற்சாலையில் வேலை இழந்த 500 இற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Latest Articles