நிகழ்நிலைக் காப்பு சட்டத்தை நிறைவேற்றும்போது பின்பற்றப்பட்ட தவறான அணுகுமுறை, புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலம் விவகாரத்தின்போதும் கடைபிடிக்கப்படலாம்.
எனவே, நாடாளுமன்ற சம்பிரதாயம் மற்றும் அரசமைப்பை பாதுகாக்கும் நோக்கிலேயே சபாநாயகருக்கு எதிராக நம்பக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுகின்றது – என்று சட்டத்துறை பேராசிரியரான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்ட பின்னர் அது தொடர்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீரிஸ் கூறியவை வருமாறு,
“ 1931 டொனமூர் யாப்பு தொட்டு 93 வருடங்களாக நாடாளுமன்ற சம்பிரதாயத்தை நாம் பாதுகாத்துவருகின்றோம். அந்த சம்பிரதாயத்தை தற்போது அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் செயற்பாடே இதற்கு காரணம்.
நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட மிகவும் பயங்கரமான சட்டமூலமே நிகழ்நிலைக் காப்பு சட்டமூலமாகும். இது தகவல் அறியும் உரிமையை இல்லாது செய்யும் சட்டமாகும். இது விடயம் தொடர்பில் சபாநாயகரின் அணுகுமுறையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
மேற்படி சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் பரிந்துரைகளை முன்வைத்திருந்தது. 13 சரத்துகளை அவ்வாறே அமுல்படுத்துவதாக இருந்தால் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் அவசியம் எனக் கூறப்பட்டிருந்தது.
அந்த பரிந்துரiயை சபாநாயகர் மீறினார். அத்துடன், மேலும் 5 பரிந்துரைகளும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசமைப்பு மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை சபாநாயகர் மீறியுள்ளார். இது மிகவும் பயங்கரமான முன்னுதாரணமாகும்.
நாடாளுமன்றம் அடுத்தவாரம்கூடும்போது புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலம் முன்வைக்கப்படலாம். அச்சட்டமூலம் தொடர்பிலும் இதே நடைமுறையை கடைபிடிக்கக்கூடும்.
தனி நபருக்கு எதிராக அல்ல, நாடாளுமன்ற சம்பிரதாயத்தை பாதுகாக்கும் நோக்கிலேயே நாம் இப்பிரேரணையை கொண்டுவருகின்றோம்.” – என்றார்.
