தாய்லாந்தில் மதுக்கடையில் தீ விபத்து: 27 பேர் பலி

தாய்லாந்து , பாங்காக் நகரில் உள்ள ஒரு மதுக்கடையில் (Bar) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்தபோது, வாடிக்கையாளர்கள் தீப்பிழம்புகளுக்கு மத்தியிலும் மதுக்கடையின் முன்வாசல் வழியாக அலறியடித்தபடி வெளியே ஓடிவந்துள்ளனர்.

சமூக ஊடகமான ‘X’ தளத்தில் வெளியாகியுள்ள வீடியோ காட்சிகளில், மதுக்கடையில் இருந்து தீப்பிழம்புகள் பயங்கரமாக வெளியேறுவதும், மக்கள் அலறிக்கொண்டு ஓடுவதும், சிலர் கீழே விழுவதும் பதிவாகியுள்ளன.

மேலும், குறைந்தது இரண்டு பேரின் உடலில் தீப்பற்றியபடியே அவர்கள் வெளியே ஓடி வருவது போன்ற அதிர்ச்சியூட்டும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற பிரதமர் அனுடின் சார்ன்விராகுல் (Anutin Charnvirakul) ஊடகங்களிடம் பேசுகையில்,

இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் விசாரணை நடந்து வருவதாக அவர் கூறினார்.

சுமார் அரை மணி நேரத்தில் தீயணைப்பு வீரர்களால் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முடிந்தாலும், அதற்குள் பெரும் சேதம் ஏற்பட்டுவிட்டது.

உள்ளூர் ஊடகங்களின் அறிக்கையின்படி, உயிரிழந்த 27 பேரில் 9 ஆண்களும், 18 பெண்களும் அடங்குவர். மேலும், 60-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில், இன்னும் பலரைக் காணவில்லை என்று தாய்லாந்து ஊடகமான Thairath செய்தி வெளியிட்டுள்ளது.

தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நெஞ்சை உலுக்குபவையாக உள்ளன.

Related Articles

Latest Articles