மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவின் தலைநகர் கனாக்ரியில் பெய்த கனமழை காரணமாகப் பாரிய குப்பை மேடு சரிந்து விழுந்ததில், வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கழிவுகளுக்குள் புதையுண்டு குறைந்தது 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கழிவுகளுக்குள் சிக்கியுள்ள குடும்பங்களை மீட்கும் பணியில் அவசர கால மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப் பேரிடரில் 22 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் உள்ளூர் அவசர சேவைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
அதிகாலையில் பெரும் சத்தத்துடன் குப்பை மேடு சரிந்து விழுந்ததாக அஞ்சிய நிலையில் இருந்த பொதுமக்கள் விவரித்துள்ளனர்.
“அதிகாலை இரண்டு அல்லது மூன்று மணியளவில் ஏதோ சரிந்து விழும் சத்தம் கேட்டது. வெளியே அனைவரும் அலறினர். நான் என் மனைவியைக் கூப்பிட்டு வீட்டிற்குள் இருக்க முடியாது என்று கூறி வெளியே ஓடினோம். நாங்கள் ஓடும்போதே பின்னால் விசித்திரமான சத்தங்கள் கேட்டன, நொடியில் எல்லாம் சரிந்து விழுந்தது” எனத் தப்பிய ஒருவர் தனது அதிர்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.
கடந்த சில நாட்களாகக் கினியாவில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. முறையான பராமரிப்பின்றி நிரம்பி வழியும் நகரக் கழிவு மையங்களின் பாதுகாப்பு ஆபத்துகளையும் உள்கட்டமைப்புச் சீர்கேடுகளையும் இச்சம்பவம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
(இலங்கையில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி புத்தாண்டு தினத்தில் மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில் மீதொட்டமுல்ல – தஹம்புர கிராமத்தைச் சேர்ந்த 32 பேர் உயிரிழந்தனர்.
குப்பை மேட்டு சரிவினால் சுமார் 145 வீடுகள் சேதமடைந்ததுடன், 180 குடும்பங்களைச் சேர்ந்த 625 பேர் இடம்பெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.)










