22 ஐ மக்கள் எதிர்க்கவில்லை: சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் பேராதரவு கிட்டும்
“அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச்சட்டமூலத்தை மக்கள் எதிர்க்கவில்லை. சிலவேளை இதற்குச் சர்வஜன வாக்கெடுப்பிற்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டாலும்கூட, மக்கள் அதற்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள்” என்று முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்:
“அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றமே உரிய சட்டவிளக்கத்தை வழங்கும். எனவே, நீதிமன்றத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்த எவரும் முற்படக்கூடாது.
நீதிமன்ற வழக்கு விசாரணைகள் விரைவாக முடிவடைய வேண்டும் என்பதையே மக்கள் விரும்புகின்றனர். அவ்வாறு விரைவாக விசாரணைகள் நடக்க வேண்டுமானால், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிக்கப்பட வேண்டும். இதனை மக்கள் எப்படி எதிர்ப்பார்கள்?
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் திட்டத்திற்காகச் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டாலும்கூட, 22-ஆவது திருத்தச்சட்டமூலத்திற்கு ஆதரவாகவே மக்கள் வாக்களிப்பார்கள். எனவே, இந்தச் சட்டத்திருத்தத்திற்கு மக்கள் மத்தியில் முழுமையான ஆதரவு உள்ளது” என்றார்.










