பதுளை மேற்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஹிம்பிலியாகஹகொட்டுவ பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று (30) இரவு பாரிய பாறையொன்று உருண்டு விழுந்ததில் அந்த வீடு பலத்த சேதமடைந்துள்ளது.
குறித்த வீடுகளுக்கு மேல்பகுதியில் அலுகொல்ல மலை அமைந்துள்ள நிலையில், கடந்த ஒரு மாத காலப்பகுதியில் அந்த மலைப் பகுதியில் இரண்டு சந்தர்ப்பங்களில் தீ பரவி, பெருமளவான பகுதி எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மலை உச்சிக்கு கீழ்பகுதியில் ஏராளமான வீடுகள் அமைந்துள்ளன. மலைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்துகளால் மண்ணின் உறுதித்தன்மை குறைந்து, மலை உச்சியில் காணப்பட்ட பாரிய பாறைகள் தளர்ந்து கீழ்நோக்கி உருண்டு வந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் நாட்களில் பெய்யக்கூடிய கனமழையுடன் இந்த நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பாறை வீட்டின் மீது விழுந்த சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டில் மூன்று பேர் இருந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எனினும், மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள ஏராளமான வீடுகள் எதிர்காலத்தில் பாறை சரிவு மற்றும் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கக்கூடும் என்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
த.டிமேஷன்










