2021 ஆம் ஆண்டில் கொவிட் – 19 தொற்றுப் பரவிய காலத்தில் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (ஏறத்தாழ 236 மில்லியன் ரூபாய்கள்) மதிப்பீட்டுச் செலவில் கண்டி தேசிய மருத்துவமனையின் 50 எதிர்மய அமுக்க தனியறைகளுடன் கூடிய (negative pressure isolation rooms) முன்தயாரிக்கப்பட்ட (pre- fabricated) நான்கு மாடிக் கட்டித்தை நிர்மாணிக்கும் கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இக்கருத்திட்டம் சார்க் அபிவிருத்தி நிதியத்தின் கொடையின் மூலம் நிதியிடப்பட்டுள்ளது.
கருத்திட்டம் அமுல்படுத்தும்போது, சார்க் அபிவிருத்தி நிதியத்தின் உடன்பாட்டின் அடிப்படையில், 50 தனியறைகளை 23 தனியறைகளாகக் குறைப்பதற்கும், 25 நோயாளர் கட்டில்களுடன் கூடிய ஆண் நோயாளர் விடுதியொன்றையும், மற்றும் 20 நோயாளர் கட்டில்களுடன் கூடிய பெண் நோயாளர் விடுதியொன்றையும் நிர்மாணிப்பதற்கும், அதற்கமைய, மொத்த நோயாளர் கட்டில்களின் எண்ணிக்கையை 50 தொடக்கம் 68 வரை அதிகரிக்கக்கூடிய வகையில் கருத்திட்டத்தின் ஆரம்ப விடயதானம் திருத்தப்பட்டுள்ளது.
இதுவரை கருத்திட்டத்தின் 282.24 மில்லியன் ரூபாய்களுக்கான நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளது.
அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தின் வேலைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கருத்திட்டத்தின் மொத்தச் செலவு மதிப்பீட்டை 1,094.22 மில்லியன் ரூபாய்களாகத் திருத்தம் செய்வதற்கும், கருத்திட்டக் காலத்தை 2027.12.31 வரை நீடிப்பதற்கும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.










