2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மாயம்: மத்திய வங்கியின் அறிக்கை அரசாங்க நிதி குழுவில் சமர்ப்பிப்பு

அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடனை மீளச் செலுத்துவதற்காக திறைசேரியிடமிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல் போனமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் (23) கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவிலேயே இது பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்குழுக் கூட்டத்தில் பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, அஜித் அகலகட, நிமல் பளிஹேன, சட்டத்தரணி சித்ரால் பெர்னாந்து, விஜேசிறி பஸ்நாயக்க, சம்பிக்க ஹெட்டிஆரச்சி, எம்.கே.எம்.அஸ்லம் மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அமெரிக்க டொலர் மில்லியன் 2.5 காணாமல் போனமை தொடர்பில் கடந்த 08ஆம் திகதி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இலங்கை மத்திய வங்கியினால் ஆராய்ந்து பார்க்கப்பட்ட பின்னர், அவர்களின் கருத்துக்களை உள்ளடக்கியதாகத் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கை மத்திய வங்கியினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை குறித்து குழுவில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகளையும் ஆராய்ந்து, குழுவின் இறுதி அறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாக அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ மற்றும் இலங்கை கணினி அவசர தயார்நிலை அணியின் (CERT) அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles