மொனராகலை தோட்டப்பகுதிகளில் பிரதி அமைச்சர் நேரடி ஆய்வு

மொனராகலை மாவட்டத்தின் குமாரி வத்த, பரவில, கும்புக்கன உள்ளிட்ட தோட்டப்பகுதிகளுக்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கௌரவ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்றைய தினம் 24.06.2026 விஜயத்தினை மேற்கொண்டார்.

இதன்போது அப்பகுதி மக்களை நேரடியாகச் சந்தித்து கலந்துரையாடிய அவர், மக்கள் எதிர்நோக்கும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்ததோடு அப்பிரதேச மக்களின் அத்தியாவசிய தேவைகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.

குறிப்பாக பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை, வழங்கல் தொடர்பாகவும், முன்பள்ளி அறநெறி பாடசாலை தொடர்பாகவும்,
வீதி வசதிகள், குடிநீர் வழங்கல், மின்சார வசதிகள், வீடமைப்பு மற்றும் ஏனைய அடிப்படை தேவைகள் தொடர்பாக மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளைப் பெற்றுத்தருவதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகளையும் பணிப்புரைகளையும் வழங்கிய பிரதி அமைச்சர், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பொதுமக்களிடம் கூறியிருந்தார்.

தோட்டப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், அவர்களுக்கான சமூக மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்விஜயத்தில் மொனராகலை பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பிரதேச மக்கள் மற்றும் சமூக பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Latest Articles