டேசன் தோட்ட மக்கள் புறக்கணிப்பு: வேலுகுமார் கடும் எதிர்ப்பு!

கண்டி மாவட்டத்தின் புசல்லாவை பிரதேசத்திற்குட்பட்ட டேசன் தோட்ட மக்களைப் புறக்கணித்து, அண்மித்த கிராமங்களைச் சேர்ந்தவர்களை அங்கு குடியேற்றும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு கண்டி மாவட்ட காணி உரிமைக்கான இயக்கத்தின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

” டேசன் தோட்டப் பகுதிகளில் வெளியாரைக் குடியேற்றும் நடவடிக்கைகளுக்குத் தோட்ட மக்கள் தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

எனினும், அந்த மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத NPP நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தோட்டக் காணிகளை வெளியாருக்குப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.

மேலும், தமது உரிமைகளுக்காகப் போராடிய மக்களைக் கடுமையான வார்த்தைகளால் எச்சரித்ததோடு, அவர்களை ஏளனமாகவும் பேசியுள்ளார். இத்தகைய அடாவடிப் போக்குகள் கண்டிக்கத்தக்கவை.

தித்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் டேசன் தோட்டத்தில் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வருகின்றன. அவர்களுக்குத் தேவையான காணி ஒதுக்கீடு அல்லது வீடமைப்புத் திட்டங்கள் குறித்து இதுவரையில் எந்தவொரு உருப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில், அதே அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் எனக்கூறி வெளிப்பகுதிகளைச் சேர்ந்த ஒரு சாராரை அழைத்து வந்து, டேசன் தோட்டப் பகுதியில் குடியேற்ற முயற்சிப்பது எந்த வகையில் நியாயமானது? இது திட்டமிட்ட வகையில் தோட்ட மக்களைப் புறக்கணிக்கும் செயலாகும்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையகப் பிரதிநிதிகள் எவரும் இந்தப் பாரபட்சமான குடியேற்றத் திட்டத்தையோ, மக்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களையோ கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இவர்களின் இத்தகைய மௌனம் தோட்ட மக்களின் காணி உரிமைகளைப் பறிப்பதற்குச் துணைபோவதாகவே அமையும்.

இன்றைய இப்போக்கை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில், கண்டி மாவட்டத்தில் எஞ்சியிருக்கும் ஏனைய தோட்டக் காணிகளையும் பறிகொடுக்க வேண்டிய அவல நிலை ஏற்படும்.

இன்றைய சர்வதேச தொழிலாளர் தினத்தில் (மே தினத்தில்), “தோட்டக் காணிகளைப் பாதுகாப்போம்! அவற்றை அந்த மக்களுக்கே பகிர்ந்தளிப்போம்!” என்ற இலட்சியத்தோடு அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் என வேலுகுமார் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Latest Articles