தோட்ட காணிகளை மக்களுக்கு பகிர்ந்தளி! வேலுகுமார் வலியுறுத்து!!

“மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள காணிகளை அந்த மக்களுக்கே பகிர்ந்தளிக்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.” – என்று கண்டி மாவட்ட காணி உரிமைக்கான இயக்கத்தின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

காணி உரிமைக்காக வெறும் கோஷங்களை மட்டும் எழுப்புவது தீர்வுக்கு வழிவகுக்காது எனச் சுட்டிக்காட்டிய அவர், அந்த இலக்கை அடைவதற்கான இலகுவான மற்றும் நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகள் குறித்துச் சிந்திக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

அதன் ஒரு அங்கமாகவே, தோட்டப்பகுதிகளில் உள்ள காணிகளை அங்கு வாழும் மக்களுக்கே பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைப்பதாக அவர் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது கண்டி மாவட்டத்தில் இவ்வாறான காணிப் பகிர்ந்தளிப்புத் திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார். அவ்வாறு வழங்கப்பட்ட காணிகளில் மக்கள் வீடுகளை அமைத்து இன்று நிம்மதியாக வாழ்ந்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சமூக பொருளாதார விடுதலை மலையக மக்களைத் தேசிய நீரோட்டத்தில் இணையச் செய்வதற்கும், அவர்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்கும் காணி உரிமை என்பது மிக அவசியமான ஒன்றாகும்.

எனவே, இந்த உரிமையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும், இதற்காக முன்னெடுக்கப்படும் அனைத்து அறவழிப் போராட்டங்களுக்கும் தனது ஆதரவு உண்டு என்றும் வேலுகுமார் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles