அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் போதுமா அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமா என்பது குறித்து உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:
“ஒட்டுமொத்த நீதித்துறை மறுசீரமைப்பின் ஓர் அங்கமாகவே 22 ஆவது திருத்தச் சட்டமூலமும், நீதிச் சேவை திருத்தச் சட்டமூலமும் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை எந்தவொரு தனிநபரையோ அல்லது தனித்தரப்பையோ இலக்கு வைத்து முன்வைக்கப்பட்டவை அல்ல. இது தொடர்பாகச் சிலர் தவறான கருத்துகளைச் சமூகத்தில் பரப்பி வருகின்றனர். இது குறித்து நாங்கள் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துத் தெளிவுபடுத்தியுள்ளோம்.
அதேவேளை, அரசமைப்பு மறுசீரமைப்பு எவ்வாறு இடம்பெற வேண்டும் என்பது தொடர்பாக அரசமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் போதுமா, அல்லது சர்வஜன வாக்கெடுப்பு அவசியமா என்பது குறித்து உயர்நீதிமன்றமே சட்ட வியாக்கியானத்தை வழங்கும். அதில் அரசாங்கம் எந்தத் தீர்மானத்தையும் எடுக்க முடியாது.
சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்காத வகையிலேயே இச்சட்டமூலத்தின் சரத்துகள் அமைந்துள்ளன என நம்புகின்றோம். இச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், இதில் ஆட்சேபனை அல்லது எதிர்ப்புகள் உள்ளவர்கள் உயர்நீதிமன்றத்தை நாட முடியும்” என்றார் நளிந்த ஜயதிஸ்ஸ.










