உலக யானைகள் தினம் இன்று, ஆகஸ்ட் 12, அனுசரிக்கப்படும் நிலையில், இலங்கையின் காட்டு யானைகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அமைச்சின் தகவலின்படி, சுற்றுச்சூழல் சமநிலையையும் உயிரியல் பல்வகைமையையும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் யானைகள், மனித நடவடிக்கைகளால் அதிகரித்த அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றன. திட்டமிடப்படாத அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக, யானைகள் வழக்கமாகப் பயன்படுத்தும் வலசைப் பாதைகள் மற்றும் யானை வழித்தடங்கள் தடைப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் தலைவர் ஹேமந்த விதானகே, இதுபற்றித் தெரிவிக்கையில், இலங்கையில் ஆண்டுதோறும் 400 இற்கும் அதிகமான யானைகள் உயிரிழப்பதாகவும், மனித-யானை மோதல்களால் சுமார் 200 மனித உயிரிழப்புகள் பதிவாகுவதாகவும் தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டில் இதுவரை 180 யானைகளும் 56 பேரும் உயிரிழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். உயிரிழந்த யானைகளில் சுமார் 75 இன் மரணங்களுக்கு மனித நடவடிக்கைகளே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. இதில் சுமார் 30 யானைகள் துப்பாக்கிச் சூட்டிலும், 23 யானைகள் மின்சாரம் தாக்கியும், 19 யானைகள் ‘ஹக்கா பட்டாஸ்’ எனப்படும் வெடிபொருட்களாலும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் காட்டு யானைகளின் எண்ணிக்கை தொடர்பாகவும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. முன்னதாக சுமார் 5,000 யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், அண்மைய வனவிலங்கு கணக்கெடுப்பில் அந்த எண்ணிக்கை 7,000 ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நிலப்பரப்பில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகளை மனிதர்களும் யானைகளும் பகிர்ந்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதால், மனித-யானை மோதல் மேலும் தீவிரமடைந்து வருவதாக ஹேமந்த விதானகே தெரிவித்துள்ளார். இதனை கட்டுப்படுத்த முறையான நீண்டகாலத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், அம்பன்பொல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 43 வயதுடைய ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நெல் வயலுக்குள் நுழைந்த காட்டு யானைகளை விரட்ட முயன்றபோதே அவர் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










