எரிபொருள் விலை குறைக்கப்படாமை பெரும் அநீதி

உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரிக்கும் போது எமது நாட்டில் விலை அதிகரித்தாலும், உலக சந்தையில் விலை குறையும் போது எமது நாட்டில் விலை குறைந்தபாடில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இது மக்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும். ஆகையினால் இந்தத் தவறும் குறைபாடும் விரைவில் திருத்தப்பட வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (26) நடைபெற்ற ‘Colombo EV Motor Show’ நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு கூறினார்.

” புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy) என்பது நாட்டின் முதன்மையான மற்றும் தூய்மையான மின் உற்பத்தி முறையாக அமைந்து காணப்பட வேண்டும் என்ற உலக பேசுபொருளாகி காணப்படும் கருத்தை எமது நாட்டிலும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்சாரப் போக்குவரத்துத் துறை என்பது சுற்றுச்சூழல் மாசடைவதைக் குறைக்கும் ஒரு செயல்முறையாக காணப்படுகின்றன.

மின்சார வாகனங்களைப் பிரபலப்படுத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அரசாங்கத்தினதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளினதும் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட மத்திய கிழக்கு யுத்த நிலைமை காரணமாக எமது நாட்டின் எரிபொருள் பாதுகாப்பின்மையின் அபாயம் வெளிப்பட்டது.

எண்ணெய் சார்ந்த எமது நாட்டின் தேவைகளுக்கான எண்ணெய், எரிவாயு மற்றும் உரங்கள் உள்ளிட்ட பல வளங்கள் ஹோர்முஸ் (Hormuz) போன்ற நீரிணைகள் ஊடாகக் கொண்டுவரப்படுவதால், இந்த எரிசக்தி மற்றும் எரிபொருள் பாதுகாப்பின்மை தெளிவாக உருவானது.

எனினும், மின்சாரப் போக்குவரத்துச் சேவையை வலுப்படுத்துவதன் மூலம் இந்த ஆபத்தான சூழ்நிலையிலிருந்து பெருமளவில் விடுபட முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles