“ சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராஜாவை விடுவித்துக்கொள்வதற்காக சாத்தியமான அத்தனை நடவடிக்கைளையும் அரசாங்கம் மேற்கொள்ளும்.”-என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“அனோஜன் சிவராஜாவுக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரி சவூதி மன்னரிடம் எமது ஜனாதிபதி கோரிக்கை விடுக்கவுள்ளார். இந்த விடயத்தில் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியின் உதவியும் கோரப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிரணிகளை பிரிதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்றும் சவூதி செல்லவுள்ளது.
அதேபோல ஐ.நா. கூட்டத்தொடரின்போது சவூதி வெளிவிவகார அமைச்சரவை எமது வெளிவிவகார அமைச்சர் சந்தித்து, இவ்விவகாரம் குறித்து கலந்துரையாடவுள்ளார்.
இவ்வாறு அனோஜனை விடுவித்துக்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.”- என்றார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.
