ஜனநாயகம் மற்றும் சட்டவாட்சிக்கு எதிராக அரசு முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் எடுத்துரைக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
” அரசு அரசியல் பழிவாங்கல் நிகழ்ச்சி நிரலை முன் கொண்டு செல்கின்றது. அரசியல் நோக்கங்களை இலக்காகக் கொண்டே கைதுகள் இடம்பெறுகின்றன.
ஜனநாயகம் மற்றும் சட்டவாட்சிக்கு எதிராக அரசு முன்னெடுக்கும் அடக்குமுறைகள் குறித்து கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடத் தீர்மானித்தோம். இதற்கமைவாகவே நேற்று செவ்வாய்க்கிழமை அமெரிக்கத் தூதரக அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியதுடன், எதிர்வரும் நாள்களில் ஏனைய இராஜதந்திரிகளையும் சந்திக்கவுள்ளோம்.
ஏனைய எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியமில்லை. .” – என்றார்.
