“கல்விக்கு கரம் கொடுப்போம்” என்ற கருப்பொருளில் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் விசேட கல்விச் செயற்றிட்ட நிகழ்வு இன்று (19.07.2026) கொழும்பு, செட்டியார் தெருவிலுள்ள ஸ்ரீ கல்யாண முருகன் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மலையக மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு மன்றத்தின் நான்கு முக்கிய செயற்றிட்டங்கள் இந்நிகழ்வில் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், மலையக பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டமும் மேலும் விரிவுபடுத்தப்பட்டது.
இந்நிகழ்வின் போது மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏழாவது நிர்வாகக் குழு உத்தியோகபூர்வமாக பதவியேற்றது. மன்றத்தின் தலைவராக ஆர். விஸ்வநாதன், செயலாளராக வி.பி. ஏகாம்பரம், பொருளாளராக பி. முரளி ஆகியோர் தமது பொறுப்புக்களைப் பொறுப்பேற்றனர்.
இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டி. சிவானந்தவேல் மற்றும் பேராசிரியர் டி.கே.என்.ஜி. புஷ்பகுமார ஆகியோர் கலந்துகொண்டு கல்வியின் அவசியம் மற்றும் மலையக மாணவர்களின் உயர்கல்வி முன்னேற்றம் குறித்து கருத்துரைகளை வழங்கினர்.
ஆண்டுதோறும் மன்றத்தால் நடத்தப்படும் “அறிவொளி” தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாளும் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது. மேலும், களுத்துறை மாவட்டத்தின் மலபொட தமிழ் வித்தியாலயத்திற்கு ஒலி அமைப்பு உபகரணங்களும், வத்தளை மாணிக்கவாசகம் பாடசாலைக்கு நிழற்பிரதி இயந்திரமும் மன்றத்தின் சார்பில் வழங்கி வைக்கப்பட்டன.
2006ஆம் ஆண்டு முதல் மலையகத்திலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் பொருளாதார வசதியற்ற மாணவர்களுக்கு தொடர்ச்சியாக நிதி உதவி வழங்கி வரும் மன்றம், இம்முறை அந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. அதன்படி, தகுதி பெறும் ஒவ்வொரு பல்கலைக்கழக மாணவருக்கும் மாதந்தோறும் ரூ.5,000 வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இவ்வாண்டு மொத்தம் 140 பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டதுடன், வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் மலையக மாணவர்களுக்கும் விசேட நிதி உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் உரையாற்றிய மன்றத்தின் புதிய தலைவர் ஆர். விஸ்வநாதன், “மலையக மாணவர்களின் கல்வி முன்னேற்றமே மன்றத்தின் உயர்ந்த இலட்சியம். புலமைப்பரிசில் உதவிகளை மட்டுமல்லாது, எதிர்காலத்தில் கல்வி வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு உதவித் திட்டங்களையும் விரிவுபடுத்தி, மலையக மாணவர்களுக்கு தொடர்ந்து வழங்க மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் எப்போதும் தயாராக உள்ளது” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மன்றத்தின் போசகர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், கல்வியாளர்கள், புத்திஜீவிகள், நன்கொடையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
