“மக்கள் வாழ்ந்தால் போதும்; அவர்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் எனில் நான் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பேன். இதுதான் எனது அரசியல்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (23) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், யாழ்ப்பாணத்தில் தனது உருவப்படத்திற்குச் செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலும் அர்ச்சுனா எம்.பி. சபையில் கருத்து வெளியிட்டார்.
இது குறித்து அவர் மேலும் பேசுகையில்:
“அண்மையில் எனது உருவப்படத்திற்குச் செருப்பு மாலை ஒன்று போடப்பட்டது. தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஒப்படைப்பதற்கு நான் ஆதரவு வழங்குவதாலேயே, கஜேந்திரகுமாரின் கட்சியினர் எனக்குச் செருப்பு மாலை போட்டிருந்தனர்.
கிளிநொச்சி வைத்தியசாலையையும் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வாருங்கள்; அதற்கும் நான் எனது முழு ஆதரவை வழங்குவேன்.
எனக்குச் சில்லறைத்தனமாக அரசியல் நடத்தத் தெரியாது. இந்த அரசாங்கம் மக்களுக்கு நல்லது செய்தால் நான் அதனை ஆதரிப்பேன். தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யுங்கள், உங்களுக்கு (அரசாங்கத்திற்கு) முழு ஆதரவைத் தருகின்றேன்.
அதேபோல், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குங்கள், அதற்கும் ஆதரவு தருகின்றேன். நான் சுயலாபத்திற்காக அரசியல் நடத்துபவன் அல்ல. மக்கள் வாழ்ந்தால் அதுவே எனக்குப் போதும். அவ்வளவுதான் எனது அரசியல்” என்றார்.










