ஜோர்தான் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பேற்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ஜோர்தான் மக்களுக்கு நேரடியாக விடுத்துள்ள செய்தியில், இந்தத் தாக்குதல் ஜோர்தான் நாட்டையோ அல்லது அதன் குடிமக்களையோ இலக்கு வைத்தது அல்ல என்றும், அங்குள்ள அமெரிக்க ராணுவ முகாம்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்டது என்றும் ஈரான் புரட்சிகர காவல்படை வலியுறுத்தியுள்ளது.
“உங்கள் நாட்டின் மீது எங்களுக்கு எந்தவிதப் பகையும் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். மாறாக, உன்னத குணம் கொண்ட ஜோர்தான் மக்கள் மீது நாங்கள் மிகுந்த அன்பு வைத்துள்ளோம்.
பாலஸ்தீன மக்களின் வலியையும் வேதனையையும் மற்ற எந்த தேசத்தையும் விட நீங்கள் நன்றாக உணர்ந்துள்ளீர்கள்.
அத்துடன், அமெரிக்காவின் நேரடிப் பங்களிப்போடு காசாவில் 20,000 குழந்தைகள் உட்பட 70,000 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்ட சியோனிச அமைப்பின் கொடூரக் குற்றங்களையும் நீங்கள் அறிவீர்கள்.
இப்பகுதியில் உள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பு இராணுவ முகாம்களை அகற்றுவதற்கான உங்களின் உறுதியான கோரிக்கை, பாலஸ்தீன மக்களைக் காப்பாற்றவும், பிராந்தியத்தில் பாதுகாப்பை மீண்டும் நிலைநாட்டவும் பெரிதும் உதவும். ஜோர்தானின் வெற்றிக்கு எங்களது வாழ்த்துகள்.” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










