உயர் நீதிமன்றத்தில் நிலவும் நீதியரசர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தியும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதமொன்றை நடத்தக் கோரியும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (26) விசேட பிரேரணை ஒன்றில் கையொப்பமிட்டுள்ளனர்.
உயர் நீதிமன்றத்தில் எட்டுக்கும் மேற்பட்ட நீதியரசர் பணியிடங்கள் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நிரப்பப்படாமல் வெற்றிடமாக உள்ளன.
இந்த நீண்டகால தாமதம் காரணமாக, நாட்டின் சட்டத்தின் ஆட்சியில் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.
அத்துடன், பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான அவர்களின் அணுகல் (Access to Justice) என்பவற்றிலும் பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் எதிரணிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
நீதிமன்ற கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள இந்த நிலை குறித்து விவாதிக்கவும், இதில் நாடாளுமன்றத்தின் வகைகூறல் மற்றும் பொறுப்புக்கூறலை (Accountability) வலியுறுத்தவும் எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இதற்கமைய, நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 83(1) இன் கீழ் விசேட விவாதமொன்றை நடத்துவதற்கு அனுமதி கோரி, சபாநாயகருக்கு பிரேரணைக் கடிதம் ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளனர்.
இதற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கையே இன்று நாடாளுமன்ற வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டது.










