தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு (Hashim Thaci), போர்க் குற்றங்களுக்காக குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
1990களில் செர்பியாவுக்கு எதிராக கொசோவோ மேற்கொண்ட சுதந்திரப் போரின் போது இடம்பெற்ற குற்றங்களுக்காக, 58 வயதான தாச்சிக்கு ஹேக் (The Hague) சர்வதேச நீதிமன்றம் புதன்கிழமை இத்தீர்ப்பை வழங்கியது. இந்த மோதலில் 10,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு கொலை, சட்டவிரோதக் கைதுகள், சித்திரவதை மற்றும் கொடூரமான நடத்தை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டார். எனினும், அவர் மீதான மேலும் சில குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.
சுதந்திரத்திற்காகப் போராடிய ‘கொசோவோ விடுதலை இராணுவம்’ (KLA) என்ற அமைப்பின் இணை நிறுவனராகவும் தளபதியாகவும் செயற்பட்ட தாச்சி, கொசோவோவில் ஒரு தேசிய வீரன் (Hero) என்றே கருதப்படுகிறார்.
கிட்டத்தட்ட 100 பேரைக்கொன்றமை மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கியமை உள்ளிட்ட கொடூரமான குற்றங்களை இழைத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதேபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட கொசோவோ விடுதலை இராணுவத்தின் மேலும் மூன்று முன்னாள் தளபதிகளுடன் இணைந்தே தாச்சி இந்த விசாரணையை எதிர்கொண்டார்.
1990களின் முற்பகுதியில் செர்பியாவின் ஒரு மாகாணமாக இருந்த கொசோவோவில், இனக்குழுவான அல்பேனியர்களால் உருவாக்கப்பட்ட ஒரு போராளி அமைப்பே ‘கொசோவோ விடுதலை இராணுவம்’ ஆகும். இந்தப் போரின் போது அப்பகுதியில் இருந்த சிறுபான்மை செர்பியர்கள் மீது இந்த அமைப்பு தாக்குதல்களை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
2008 ஆம் ஆண்டு கொசோவோ சுதந்திரப் பிரகடனம் செய்தபோது தாச்சி அதன் முதல் பிரதமரானார். பின்னர் அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்ற போதிலும், ஹேக் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக 2020 ஆம் ஆண்டு தனது பதவியை இராஜினாமா செய்தார்.
நீதிமன்றத் தீர்ப்பைப் பிரம்மாண்ட திரைகளில் காண்பதற்காகக் கொசோவோவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டிருந்தனர்.
தலைநகர் பிரிஸ்டினாவில் (Pristina) தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் மக்கள் கண்ணீர் விட்டு அழுத காட்சிகளைப் புகைப்படங்களும் காணொளிகளும் காட்டின.










