நாவலப்பிட்டி, வெரலுகஷின்ன பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டமொன்றின் அருகிலுள்ள கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில் சிறுத்தையொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுத்தையின் சடலத்தை கம்பளை வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் கடந்த 27ஆம் திகதி மீட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர் இரையைத் துரத்திச் சென்றபோது சிறுத்தை தவறுதலாகக் கிணற்றில் விழுந்ததா அல்லது கம்பி வலையில் சிக்கி உயிரிழந்த பின்னர், யாராவது அதன் சடலத்தைக் கிணற்றில் கொண்டுவந்து போட்டார்களா என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த கிணற்றை அப்பகுதி மக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்தி வந்த போதிலும், சமீபத்தில் ஏற்பட்ட சுழற்காற்று மற்றும் கடும் மழையினால் பெருமளவிலான மண் அடித்துவரப்பட்டு கிணற்றில் படிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கிணற்றில் விழுந்த சிறுத்தையால் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் இருந்தபோதிலும், அது உயிரிழந்திருக்கலாம் எனப் பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த கிணற்றிலிருந்து நீண்டகாலமாக மக்கள் நீரைப் பயன்படுத்துவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கிணற்றுக்கு அருகிலுள்ள கோப்பித் தோட்டத்தில் பணிக்குச் சென்ற தொழிலாளர் ஒருவர் சிறுத்தையின் சடலத்தைக் கண்டுள்ளார். இதனையடுத்து, நாவலப்பிட்டி பொலிஸார் ஊடாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுத்தையின் சடலம் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதவானின் உத்தரவைப் பெற்ற பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக ரந்தெனிகல கால்நடை வைத்திய அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
