இஸ்ரேலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் அவருக்கு எதிரான முக்கிய அரசியல் தலைவரான காடி ஐசன்கோட்டும் ஆட்சியமைப்பதற்கான உரிமையைக் கோரி வருகின்றனர். எனினும், வெளியேறும் வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின்படி, இரு தரப்பினருக்கும் இடையில் சமநிலையான நிலை காணப்படுவதால், தேர்தல் முடிவுகள் அரசியல் இழுபறியை ஏற்படுத்தியுள்ளன.
வலதுசாரிக் கட்சிகளை உள்ளடக்கிய வலுவான தேசிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். அதேவேளை, மக்கள் நெதன்யாகு தொடர்ந்து பிரதமராக இருப்பதை விரும்பவில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்ட ஐசன்கோட், அவர் அரசியலிலிருந்து ஓய்வுபெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். எனினும், இருவருமே தாம் வெற்றிபெற்றதாக அறிவிக்கவில்லை.
வெளியேறும் வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள், இரு தரப்பினருக்கும் இடையிலான போட்டியில் தெளிவான வெற்றியாளரை அடையாளம் காணவில்லை.
கான் 11 மற்றும் சேனல் 13 தொலைக்காட்சிகளின் கருத்துக்கணிப்புகளின்படி, இரு அணிகளும் தலா 51 ஆசனங்களைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சேனல் 12 வெளியிட்ட கணிப்பில், நெதன்யாகுவின் லிக்குட் கட்சி தலைமையிலான அணி 52 ஆசனங்களையும், எதிரணி 49 ஆசனங்களையும் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், 120 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் (க்னெசெட்) பெரும்பான்மையைப் பெறுவதற்குத் தேவையான 61 ஆசனங்களை எந்த அணியும் பெறவில்லை.
இந்த அரசியல் இழுபறி நெதன்யாகுவுக்குச் சாதகமாக அமையக்கூடும். கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நீண்டகாலம் நீடிக்கக்கூடும் என்பதால், புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை அவர் காபந்து பிரதமராகத் தொடர்ந்து பதவி வகிக்கலாம். அல்லது மற்றுமொரு தேர்தல் நடத்தப்படும் வரையிலும் அவர் பதவியில் நீடிக்கக்கூடிய சூழல் உருவாகலாம்.
இதற்கிடையில், இதாமர் பென்-க்விர் மற்றும் பெசலேல் ஸ்மோட்ரிச் தலைமையிலான தீவிர வலதுசாரி மதக் கட்சிகள், நெதன்யாகுவின் அணியில் மொத்தமாக 13 ஆசனங்களைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த இரு தலைவர்களும் குறிப்பிடத்தக்க ஆசன அதிகரிப்பைப் பெறவில்லை.
முக்கிய இரு அரசியல் அணிகளுக்கும் வெளியே உள்ள அரபுக் கட்சிகள், ஆட்சியமைப்பதில் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கக்கூடும். ஆனால், யஷார் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தலைவருமான ஐசன்கோட், அந்தக் கட்சிகளுடன் இணைந்து அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பை ஏறத்தாழ நிராகரித்துள்ளார். இதனால், அவருக்கான ஆட்சியமைப்பு வாய்ப்புகள் மேலும் சிக்கலடைந்துள்ளன.
பாதுகாப்பு விவகாரத்தில் அரசியல் மோதல் தீவிரம்
ஜெருசலேமில் உள்ள லிக்குட் கட்சியின் தேர்தல் தலைமையகத்தில் புதன்கிழமை அதிகாலை 3 மணிக்குப் பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய நெதன்யாகு, இஸ்ரேலின் இராணுவ வெற்றிகளை முன்னிலைப்படுத்தினார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இணைந்து ஈரானுக்கு எதிராக மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கும் சாத்தியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“ஈரானின் இருத்தலுக்கே அச்சுறுத்தலாக விளங்கும் அபாயத்தை ஒரேயடியாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, எமது பங்காளியான ஜனாதிபதி ட்ரம்புடன் இணைந்து செயல்பட இஸ்ரேலுக்கு ஒரு வரலாற்று வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், வேறு நோக்கங்கள் இந்தப் புனிதமான இலக்கிலிருந்து எம்மைத் திசைதிருப்ப அனுமதிக்கக் கூடாது” என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, இஸ்ரேலின் பாதுகாப்பு விவகாரங்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த வேண்டாம் என நெதன்யாகுவுக்கு ஐசன்கோட் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
“நெதன்யாகு தற்போது மக்கள் ஆணையோ நம்பிக்கையோ இல்லாத காபந்து பிரதமராகவே உள்ளார்” எனக் குறிப்பிட்ட ஐசன்கோட், இஸ்ரேலின் பாதுகாப்பை விட அரசியல் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக உறுதியாகச் செயல்படுமாறு பாதுகாப்புத் துறையினரைக் கேட்டுக்கொண்டார்.
இஸ்ரேலின் மத்திய தேர்தல் ஆணைக்குழுவின் தகவலின்படி, இம்முறை வாக்களிப்பு வீதம் 77.7 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான காலப்பகுதியில் பதிவான மிக உயர்ந்த வாக்களிப்பு வீதமாகும். 2022ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது சுமார் ஏழு சதவீதப் புள்ளிகளால் அதிகமாகும்.
இறுதி தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலின் பிளவுபட்ட அரசியல் கட்டமைப்பில், சிறிய கட்சிகள் ஆட்சியமைப்பதற்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் தீர்மானிக்கும் சக்தியாகச் செயல்படக்கூடும். கடந்த காலத் தேர்தல்களுக்குப் பின்னர் இத்தகைய பேச்சுவார்த்தைகள் பல வாரங்கள் அல்லது மாதங்கள் வரை நீடித்துள்ளன.
எந்தவொரு அணியாலும் அரசாங்கத்தை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டால், மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகலாம். எனினும், அதிக வாக்களிப்பு வீதத்தைச் சுட்டிக்காட்டி, மற்றுமொரு தேர்தல் நடத்தப்படுவதை ஐசன்கோட் எதிர்த்துள்ளார்.
இஸ்ரேல் ஜனநாயக நிறுவனத்தின் தலைவர் யோஹனன் பிளெஸ்னர், வெளியேறும் வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் நெதன்யாகுவின் கூட்டணிக்கு மிகப்பெரிய பின்னடைவைக் காட்டுவதாகக் குறிப்பிட்டார். அதேவேளை, ஐசன்கோட் தெளிவான வெற்றியாளராக உருவெடுக்கவில்லை என்றும், வாக்குகள் எண்ணப்படும் நிலையில் முடிவுகள் மாறக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
நெதன்யாகுவுக்குப் பின்னடைவு; வெற்றியாளர் யார் என்பது தெளிவில்லை
வெளியேறும் வாக்காளர்களின் கருத்துக்கணிப்பு முடிவுகள் இறுதித் தேர்தல் முடிவுகளுடன் ஒத்துப்போனால், ஒரு கட்டத்தில் 68 ஆசனங்களைக் கொண்டிருந்த நெதன்யாகுவின் தேசியவாத – மதவாதக் கூட்டணி, ஆட்சியமைப்பதற்குத் தேவையான 61 ஆசனங்களைக் காட்டிலும் குறைவான ஆசனங்களையே பெறும்.
இதனால், நெதன்யாகுவுக்கு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான தெளிவான பாதை இல்லாத நிலை உருவாகியுள்ளது.
66 வயதான ஐசன்கோட், நெதன்யாகுவின் வலுவான போட்டியாளராக உருவெடுத்துள்ளார். காசா போரில் தனது மகனையும் இரண்டு மருமகன்களையும் இழந்துள்ள அவர், தேசியப் பாதுகாப்பு தொடர்பான தனது அனுபவத்தை முன்னிறுத்தியதுடன், உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் மிதவாத நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே அரசியலில் பிரவேசித்த ஐசன்கோட், 2023ஆம் ஆண்டு ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் நெதன்யாகு தலைமையிலான போர்க்கால அமைச்சரவையில் இணைந்தார். எனினும், எட்டு மாதங்களுக்குப் பின்னர் பிரதமரின் தலைமைத்துவத்தை விமர்சித்து அவர் பதவி விலகினார்.
நெதன்யாகுவின் தலைமைத்துவத்திலிருந்தும் தீவிர வலதுசாரிக் கூட்டணிக் கட்சிகளிடமிருந்தும் மாற்று அணுகுமுறையை ஐசன்கோட் முன்வைத்தாலும், பாதுகாப்பு விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார். 2023ஆம் ஆண்டு ஹமாஸ் தாக்குதலுக்குப் பின்னர் இத்தகைய அணுகுமுறை இஸ்ரேலில் மேலும் வலுப்பெற்றுள்ளது.
பாலஸ்தீன அரசை உருவாக்குவதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவிப்பதுடன், ஹமாஸின் இராணுவப் பிரிவு அழிக்கப்பட வேண்டும் அல்லது முற்றாகச் செயலிழக்கச் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.
காசா சுகாதார அதிகாரிகளின் தகவலின்படி, 74,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களின் உயிரிழப்புக்குக் காரணமான இஸ்ரேலின் போர் நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக ஐசன்கோட் கூறியுள்ளார். ஹமாஸ் இன்னமும் காசாவில் அதிகாரத்தைத் தக்கவைத்திருப்பதே இதற்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
பல அரபுக் கட்சிகளை உள்ளடக்கிய கூட்டுப் பட்டியல் (Joint List) கூட்டணியின் தலைமையகத்தில் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானபோது, ஆதரவாளர்கள் ஆரவாரத்துடனும் கைதட்டல்களுடனும் அவற்றை வரவேற்றனர். இஸ்ரேலின் பாலஸ்தீனியக் குடிமக்கள் மத்தியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்களிப்பு இடம்பெற்ற இரவாக இது அமைந்தது.
“ஆக்கிரமிப்பையும் இனவாதத்தையும் நாம் நிராகரிக்கிறோம். நாம் இங்கேயே தொடர்ந்து இருப்போம்” என நாசரேத்தில் அமைந்துள்ள கூட்டணியின் தலைமையகத்தில் உரையாற்றிய கூட்டுப் பட்டியலின் வேட்பாளர் ஃபாத்தென் கட்டாஸ் தெரிவித்துள்ளார்.
அரபு மக்களின் அதிகளவிலான வாக்களிப்பு, நெதன்யாகுவின் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதில் தீர்மானிக்கும் பங்கை வகிக்கும் என வேட்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
போர்க்காலச் சூழலில் மக்களின் தீர்ப்பு
ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 251 பேர் பணயக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இஸ்ரேலின் வரலாற்றில் மிக மோசமான உயிரிழப்புகளை ஏற்படுத்திய அந்தத் தாக்குதலின் பாதிப்புகளையும், அதனைத் தொடர்ந்து காசா, லெபனானில் ஹிஸ்புல்லாஹ் அமைப்புக்கு எதிராகவும் ஈரானுக்கு எதிராகவும் முன்னெடுக்கப்பட்ட போர்களையும் கருத்திற்கொண்டு வாக்காளர்கள் தமது தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
நாட்டின் மிகப்பெரிய பாதுகாப்புத் தோல்விக்காக நெதன்யாகு விமர்சனங்களை எதிர்கொண்டபோதிலும், ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஈரானின் முக்கிய தலைவர்களைக் கொன்றதன் மூலம் இஸ்ரேலையும் உலகையும் பாதுகாப்பானதாக மாற்றியுள்ளதாக அவர் வாதிட்டுள்ளார்.
நெதன்யாகுவின் வலதுசாரிக் கூட்டணியின் கொள்கைகள் இஸ்ரேலுக்குள் கடும் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளதுடன், சர்வதேச அரங்கில் அந்நாடு மேலும் தனிமைப்படுத்தப்படுவதற்கும் வழிவகுத்துள்ளன. இருப்பினும், இஸ்ரேலின் எதிரிகளை எதிர்கொள்ளத் துணிவுள்ள தலைவராகத் தம்மை நெதன்யாகு முன்னிறுத்தி வருகிறார்.
77 வயதான நெதன்யாகு, கடந்த 30 ஆண்டுகளில் ஏறத்தாழ 19 ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்துள்ளார். பல அரசியல் நெருக்கடிகளை அவர் கடந்துவந்துள்ளார். 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவரது எதிரணியினர் ஒரே ஒரு தடவை மாத்திரமே அவரிடமிருந்து பிரதமர் பதவியைக் கைப்பற்ற முடிந்தது.
இரண்டு ஆண்டுகளில் நான்கு தேர்தல்கள் முடிவற்ற நிலையை ஏற்படுத்திய பின்னர், எதிரணியினர் ஆட்சியமைத்தனர். எனினும், 18 மாதங்களுக்குப் பின்னர் நெதன்யாகு மீண்டும் ஆட்சிக்குத் திரும்பினார்.
தற்போதைய தேர்தலை எதிர்கொண்டபோது, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஊழல் குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்கொண்டிருந்தார். அந்தக் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்து வருகிறார். அத்துடன், ஹமாஸ் தலைமையிலான ஆயுததாரிகள் தாக்குதல் நடத்துவதற்கு வழிவகுத்த புலனாய்வுத் தோல்விகள் தொடர்பாகவும் அவர் விமர்சனங்களைச் சந்தித்துள்ளார்.
